• Download mobile app
07 May 2024, TuesdayEdition - 3009
FLASH NEWS
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கோட்டை அமீர் மதநல்லிணக்க விருதை இந்த ஆண்டு வழங்காதது ஏன்? பாஜக – அதிமுக கூட்டணிக்கு அச்சாரமாக – துரைமுருகன் கேள்வி

January 26, 2019 தண்டோரா குழு

பாஜக – அதிமுக கூட்டணிக்கு அச்சாரமாக, இவ்வாண்டுக்கான “கோட்டை அமீர் பதக்கத்தை” யாருக்கும் வழங்காமல் முதலமைச்சர் புறக்கணித்திருப்பது மிகுந்த வேதனையளிக்கிறது என திமுக பொருளாளர் துரைமுருகன் கூறியுள்ளார்.

இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில்,

”மத நல்லிணக்கத்தைப் போற்றிப் பாதுகாக்க கருணாநிதி அறிவித்த கோட்டை அமீர் பதக்கத்தை இந்த குடியரசு தின விழாவில் வழங்காமல் புறக்கணித்திருக்கும் அதிமுக அரசுக்கு கடும் கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன். கோவை மாநகரத்தைச் சேர்ந்த கோட்டை அமீர், மத நல்லிணக்கத்துக்காக பாடுபட்டு, இந்துக்களும், முஸ்லிம்களும் இணக்கமாக வாழ வேண்டும் என்று அயராது பிரச்சாரம் செய்த காரணத்தால் தனது இன்னுயிரைப் பறி கொடுத்தவர்.

நாட்டின் ஒற்றுமைக்கான அவரது பணியினைப் பாராட்டி, அவர் பெயரில் கோட்டை அமீர் மத நல்லிணக்கப் பதக்கம் அறிவிக்கப்பட்டு, அந்தப் பதக்கம் ஒவ்வொரு வருடமும் சமய நல்லிணக்கத்திற்காக பாடுபடும் ஒருவருக்கு, குடியரசு தின விழாவில் வழங்கப்படும் என 15.5.2000-ம் ஆண்டு மே மாதம் 15-ம் தேதி அன்று சட்டப்பேரவையில் கருணாநிதி அறிவித்தார். அதைத் தொடர்ந்து ஒவ்வொரு வருடமும் குடியரசு தின விழா நிகழ்ச்சியில் இந்தப் பதக்கம் தொடர்ந்து வழங்கப்பட்டு வருவதோடு மட்டுமின்றி- இப்பதக்கம் பெறுபவருக்கு 25 ஆயிரம் ரூபாய் ரொக்கப் பணமும் கொடுக்கப்படுகிறது.

வருகின்ற தேர்தலில் அமையப் போகும் பாஜக-அதிமுக கூட்டணிக்கு அச்சாரமாகவும், பாஜகவின் மிரட்டலுக்குப் பயந்தும் ‘கோட்டை அமீர் பதக்கத்திற்கு’ இந்த வருடம் யாரையும் தேர்வு செய்யாமலும், அந்தப் பதக்கத்தை யாருக்கும் வழங்காமலும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி புறக்கணித்திருப்பது மிகுந்த வேதனையளிக்கிறது.’வேற்றுமையில் ஒற்றுமை’ என்ற உன்னதக் கோட்பாட்டின் ஒரு அடையாளமாக கொண்டாடப்படும் குடியரசு தின விழாவிலேயே இப்படியொரு வரம்பு மீறிய செயலில் ஈடுபட்டு, மத நல்லிணக்கத்திற்காகப் பாடுபட்டவரை இழிவுபடுத்தியிருப்பதும், சமய நல்லிணக்க உணர்வை கொச்சைப்படுத்தியிருப்பதும் மிகுந்த கண்டனத்திற்குரியது.

ஆகவே, சமய நல்லிணக்கத்திற்காக பாடுபட்ட ஒருவரை ‘கோட்டை அமீர் மத நல்லிணக்கப் பதக்கத்திற்கு’ தேர்வு செய்து அவருக்கு அந்தப் பதக்கத்தை உடனடியாக வழங்கிட வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.நாட்டின் ஒருமைப்பாட்டிற்காக அவர் ஆற்றிய தொண்டினை நினைவுகூரும் வகையில் கோட்டை அமீரின் 25-வது ஆண்டு மறைவு தினத்தை அரசு விழாவாக நடத்திட வேண்டும்” என்று துரைமுருகன் தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்க