September 3, 2020
தண்டோரா குழு
கோவை கிழக்கு மண்டலத்தில் உள்ள கொரோனா சிகிச்சை மையங்களை மாநகராட்சி ஆணையர் குமாரவேல் பாண்டியன் இன்று ஆய்வு செய்தார்
கொரோனா வைரஸ் தொற்று பாதிக்கப்பட்டவர்களுக்கு கோவை அரசு மருத்துவமனை, இ.எஸ்.ஐ மருத்துவமனை மற்றும் கொடிசியா ஆகியவற்றில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.கோவை மாநகராட்சியிலுள்ள ஐந்து மண்டலங்களில் அனைத்து பகுதிகளிலும் தொடர்ந்து சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டு, மருத்துவ பரிசோதனை செய்து பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், கொடிசியாவில் உள்ள சிகிச்சை மையத்தில் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு மேற்கொண்டார். இதனை தொடர்ந்து கொரோனா தொற்று பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சையளிப்பதற்காக கிழக்கு மண்டலம் காளப்பட்டி சாலையில் தனியார் கலையரங்கத்தில் தயார் நிலையில் அமைக்கப்பட்டுள்ள சுமார் 316 படுக்கைகள் கொண்ட கொரோனா சிகிச்சை மையத்தை பார்வையிட்ட ஆணையாளர் அங்கு சுகாதார வசதி, குடிநீர் வசதி, கழிப்பிட வசதி, மின்வசதி மற்றும் சிகிச்சையளிக்கப்படும் முறைகள் குறித்தும் மருத்துவர்கள் சுகாதார அலுவலர்களிடம் கேட்டறிந்தார்.
ஆய்வின்போது கிழக்கு மண்டல உதவி ஆணையர் முருகன், நகர்நல அலுவலர் ராஜா மற்றும் மருத்துவர்கள், செவிலியர்கள், சுகாதார ஆய்வாளர்கள் ஆகியோர் உடனிருந்தனர்.