June 23, 2020
தண்டோரா குழு
ஹஜ் புனித யாத்திரைக்கு சவுதி அரேபியாவுக்கு அனுப்பப்பட மாட்டார்கள் என மத்திய அமைச்சர் கூறியுள்ளார்.
உலகம் முழுவதும் கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்த சூழலில் கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக இந்த ஆண்டு மக்காவுக்கு ஹஜ் பயணத்தில் பங்கேற்கக்கூடியவர்களின் எண்ணிக்கையை சவுதி அரேபியா கணிசமாக குறைக்க திட்டமிட்டு உள்ளதாக அரசு நடத்தும் ஊடகங்கள் தெரிவிக்கின்றன.மேலும், வெளி நாடுகளில் இருந்து யாரும் புனித பயணம் மேற்கொள்ள அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்றும் அதே நேரம் சவுதி அரேபியாவுக்குள் உள்ள வெளிநாட்டினர் ஹஜ் பயணம் மேற்கொள்ள அனுமதிக்கப்படுவார்கள் என்றும் கூறி உள்ளது
இந்த நிலையில் இந்தியாவில் இருந்து ஹஜ் பயணம் மேற்கொள்ள விண்ணப்பித்தவர்களின் கட்டணம் திருப்பி கொடுக்கப்படும் என்று மத்திய அமைச்சர் கூறியுள்ளார்.
இது குறித்து மத்திய அமைச்சர் முக்தர் அப்பாஸ் நக்வி கூறியுள்ளதாவது,
கொரோனா அச்சுறுத்தல் காரணமாக இந்த ஆண்டு ஹஜ் புனித யாத்திரைக்கு அனுமதி இல்லை. இந்தியாவில் இருந்து ஹஜ் புனித யாத்திரைக்கு சவுதி அரேபியாவுக்கு அனுப்பப்படமாட்டார்கள். ஹஜ் புனித யாத்திரைக்கு விண்ணப்பித்தவர்களின் கட்டணம் திரும்ப கொடுக்கப்படும். 2.3 லட்சத்துக்கும் மேற்பட்டவர்களுக்கு ரத்து கட்டணம் பிடிக்கப்படாமல் பணம் திரும்ப வழங்கப்படும் என கூறி உள்ளார்.