July 8, 2020
தண்டோரா குழு
கொரொனா எதிரொலியால் வருவாய் இல்லாமல் தவிக்கும் இசைக்கலைஞர்கள், தமிழக அரசு நிவாரணத் தொகையை வழங்க வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
ஆர்கெஸ்ட்ரா, பஜனை, கர்நாடக சங்கீதம், கிருஷ்ண லீலா, நாடகம் போன்ற நிகழ்ச்சிகள் பெரும்பாலும் கோவில் திருவிழாக்களில் நடத்தப்படுகின்றன. மார்ச் மாதம் தொடங்கி ஜீன் முதல் வாரம் வரை தமிழகம் முழுவதும் உள்ள கோவில்களில் விழாக்கள் எடுக்கப்படுவது வழக்கம். ஆனால், கொரொனா தொற்று காரணமாக , கோவில்களில் மக்கள் கடந்த 3 மாதங்களாக அனுமதிக்கப்பட வில்லை. மேலும் கோடை விழாவும் விமர்சையாக நடைபெறாமல் எளிமையாக பூஜைகள் மட்டுமே அர்ச்சகரால் நடத்தப்பட்டது.இதனால் ஆர்மோனியம், மிருதங்கம், , தபேலா, புல்லாங்குழல், நாதஸ்வரம் , கீ போர்டு மற்றும் வாய்ப்பாட்டு, கிருஷ்ண லீலா, நாடகக்கலைஞர்கள், ஒயிலாட்டம், ஆர்கெஸ்ட்ரா , பஜனை குழுவினர் பெரியளவில் வருவாயில்லாமல் பாதிக்கப்பட்டுள்ளனர்.
மேலும் வீடுகளில் இசை வகுப்புகள் நடத்தும் ஆசிரியர்கள் கொரொனா தொற்றிலிருந்து தப்பித்தாலும், வருவாய் இல்லாமல் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர்.கோவை மாவட்டம் முழுவதும் 500 க்கும் மேற்பட்ட ஆர்கெஸ்ட்ரா கலைஞர்கள் திருமணம், கோவில் திருவிழாக்களை நம்பியே காலம் கழித்து நிலையில் தற்போது கிடைக்கின்ற வேலைக்கு செல்ல வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். இதே போல இசை ஆசிரியர்கள் 200 க்கும் மேற்பட்டோரும், 300 பஜனை குழுவினரும், கார்நாடக சங்கீத பக்க வாதிய கலைஞர்கள் என சுமார் 2000 க்கும் மேற்பட்டோர் வருவாய் இழந்து அரசின் உதவிக்காக காத்திருக்கின்றனர்.மாதம் 12 ஆயிரம் முதல் 15 ஆயிரம் ரூபாய் வரை வருமானம் ஈட்டியதாகவும், தற்போது கொரொனா எதிரொலியால் தமிழக அரசு வழங்கும் ரேசன் பொருட்களை வைத்து வாழ்க்கையை நகர்த்தி வருவதாக சேகர் தெரிவித்தார். மேலும் நிகழ்ச்சி ஏற்பாடு செய்து தரும் ஒப்பந்ததாரர்கள் ஒரு நாளைக்கு 1800 ரூபாய் வரை நிகழ்ச்சிக்கு வழங்கி வந்ததாகவும், தற்போது கொரொனா பிரச்சனை காரணமாக அவர்களும் உதவவில்லை என்றார்.
இதே போல கிருஷ்ணா லீலா , நாடகம், பஜனை செய்து வரும் மாணிக்க வாசகம் கூறுகையில் கோவில் திருவிழாக்கள் இல்லாததால் நிகழ்ச்சிகள் இல்லை எனவும், 30 ஆண்டுகளாக இசை நிகழ்ச்சிகள் நடத்தி வந்த நிலையில் கொரொனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.அனைத்து கலைஞர்களும் ஒருமித்த குரலில் தமிழக அரசு நிவாரண தொகை வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.