October 21, 2017
தண்டோரா குழு
புதுதில்லியிலிருந்து இன்டோர் நகருக்கு பயணித்த ஜெட் ஏர்வேஸ் விமானத்தில் பயணித்த பயணியின் கைபேசியில் திடீரென லேசான தீ விபத்தால் பரபரப்பு ஏற்பட்டது.
இந்திய தலைநகர் புதுதில்லிவிமான நிலையத்திலிருந்து மத்திய பிரதேஷ் மாநிலத்தின் இன்டோர் நகருக்கு 120 பயணிகளுடன்,9W791 ஜெட் ஏர்வேஸ் விமானம் நேற்று(அக்டோபர் 2௦) புறப்பட்டு சென்றது. அந்த விமானத்தில் அர்பிதா தால் என்னும் பெண் தனது கணவருடன் பயணம் செய்தார். விமானத்திற்குள் எடுத்து செல்லும் பையில், அவருடைய Samsung J7 வகை கைபேசி இருந்தது. அந்த பையை விமான இருக்கையின் அருகில் வைத்துள்ளார்.
விமானம் புறப்பட்டு சென்ற 15 நிமிடங்களுக்கு பிறகு, அவருடைய பையிலிருந்து புகை வருவதை கவனித்துள்ளார். உடனே விமான ஊழியர்களின் உதவியை நாடியுள்ளார். விமானத்திலிருந்த தீயனைப்பான் கருவியை ஒரு விமான ஊழியர் எடுத்து வந்து, அந்த கைபேசியில் ஏற்பட்ட புகையை அணைக்க முயன்றார். ஆனால், அந்த கருவியும் சரியாக செயல்படவில்லை. அர்பித்தாவின் பையின் மேல், தண்ணீர் உற்றுங்கள் என்று மற்ற பயணிகள் கூறியதை அடுத்து, அவருடைய பையன் மேல் தண்ணீர் ஊற்றி, புகையை அணைத்தனர்.
இதற்கிடையில், மற்றொரு விமான ஊழியர் ஒரு நீண்ட தட்டில் தண்ணீரை எடுத்துக்கொண்டு வந்தார். அதில் அந்த கைபேசியை போட்டுள்ளனர். இந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கையால், விமானத்திற்கோ அல்லது அதில் பயணித்த மற்ற பயணிகளுக்கு எந்த ஆபத்தும் ஏற்படவில்லை.
இன்டோர் விமான நிலையத்தில் விமானம் தரையிறங்கிய பிறகு, விபத்திற்குள்ளான அந்த கைபேசியை அதிகாரிகள் கைபற்றி, அந்த சம்பவம் குறித்து விசாரணை முடிந்த பிறகு, அதை அதன் உரிமையாளர்களிடம் ஒப்படைக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.