September 9, 2020
தண்டோரா குழு
கேரளா தங்கக் கடத்தல் விகாரத்தில் கோவை நகைப்பட்டறை உரிமையாளர் வீடு மற்றும் பட்டறைகளில் என் ஐ ஏ அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.
கேரள தங்கக் கடத்தல் விவகாரத்தில் ஸ்வப்னா சுரேஷ் உட்பட பலர் கைதுசெய்யப்பட்டனர். இந்த கடத்தல் சம்பவத்தில் தீவிரவாத தொடர்பு குறித்து தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ)விசாரணை நடத்தி வருகிறது.இந்நிலையில்,இந்த வழக்கு தொடர்பாக என் ஐ ஏ அதிகாரிகள் தமிழகத்தில் முகாமிட்டு விசாரணை நடத்தி வருகின்றனர். சென்னை,திருச்சி,கோவை,மதுரை ஆகிய விமான நிலையங்கள் வழியாக நடந்த சுமார் 400 கிலோ தங்கக் கடத்தல் வழக்கு விவரங்களை என் ஐ ஏ அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர்.சென்னையில் உள்ள என் ஐ ஏ குழுவினர்,இந்த தங்கக் கடத்தல் வழக்கு தொடர்பான தகவல்களை தொடர்ந்து சேகரித்து வருகின்றனர்.
இந்நிலையில் கோவை பவிழம் வீதியில் என்.ஐ.ஏ அதிகாரிகள் பட்டறை உரிமையாளர் நந்தகுமார்(42) என்பவரது வீட்டில் தற்போது சோதனை செய்து கொண்டுள்ளனர். டி கே மார்க்கெட் பின்புறம் அபாய முக்கு என்ற இடத்திலுள்ள இவரது பட்டறை மற்றும் வீடுகளில் காலை 7 மணி முதல் சோதனை நடந்து வருகிறது.டிஎஸ்பி சாகுல் அமீது தலைமையில் இரண்டு வாகனங்களில் வந்த 6 பேர் கொண்ட அதிகாரிகள் குழுவினர் சோதனை செய்து வருகின்றனர்.தங்கம் கொடுக்கல் வாங்கல் குறித்த விவரம் சேகரிக்கும் பணி நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது.அங்கு பணிபுரியும் ஊழியர்களிடமும் விசாரணை நடைபெற்று வருவதாக தெரிகிறது.