July 14, 2020
தண்டோரா குழு
கோவையிலிருந்து கேரளாவிற்கு கடத்த முயன்ற ரூ.15 லட்சம் மதிப்பிலான குட்கா பொருட்களை கேரள போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.
கோவையிலிருந்து கேரளாவிற்கு வாளையார் வழியாக செல்லும் வாகனங்களை கேரள மாநில போலீசார் தீவிரமாக சோதனை செய்து வருகின்றனர். கடந்த சில நாட்களில் மட்டும் ஹவாலா பணம் 2 கோடி ரூபாய் அளவிற்கு சிக்கியுள்ளதை அடுத்து கேரள போலீசார் இந்த நடவடிக்கையை மேற்கொண்டு வருகின்றனர். இதனால் பல்வேறு வகையான பொருட்களை எடுத்து செல்லும் வாகனங்களும் தீவிர தணிக்கைக்கு உட்படுத்தப்பட்டு வருகிறது.
இந்நிலையில் கோவையில் இருந்து பனியன் கழிவுகளை ஏற்றி சென்ற பிக் அப் வாகனம் ஒன்றை கேரள போலீசார் வாளையார் சோதனை சாவடியில் நிறுத்தி சோதனையிட்டனர். சோதனையின் போது அதில் இருந்த மூட்டைகளில் சில சந்தேகத்திற்கிடமாக இருந்ததால் போலீசார் அதனை பிரித்து பார்த்தனர். அப்போது பனியன் கழிவுகளுக்குள் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள்,பாக்கெட் பாக்கெட்டாக இருந்ததை போலீசார் கண்டுபிடித்தனர்.இதனை பறிமுதல் செய்த போலீசார் இது தொடர்பாக வாகன ஓட்டுனரான கோவையை சேர்ந்த ஜைன்னுலாபுதீன் என்பவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.பறிமுதல் செய்யப்பட்ட பொருட்களின் மதிப்பு சுமர் 15 லட்சம் ரூபாய் இருக்கலாம் என போலீசார் தெரிவித்துள்ளனர்.