October 11, 2025
தண்டோரா குழு
குமரகுரு கல்வி நிறுவனங்கள் சார்பில் 10வது FMAE தேசிய மாணவர் மோட்டார் ஸ்போர்ட்ஸ் போட்டி துவக்கம் தெலங்கானா
முன்னாள் அமைச்சர் கே.டி. ராமா ராவ், துவக்கி வைத்தார்.
இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்து 70க்கும் மேற்பட்ட மாணவர் குழுக்கள் மற்றும் 1300க்கும் மேற்பட்ட இளம் பொறியாளர்கள் தங்கள் வாகன வடிவமைப்பு திறன்களை தொழில் நிபுணர்கள் குழுவின் முன்னிலையில் வெளிப்படுத்தினர்
தெலுங்கானாவின் முன்னாள் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் மற்றும் தற்போதைய பாரத் ராஷ்டிர சமிதி (BRS) கட்சியின் செயல் தலைவர் கே.டி. ராமராவ், கோயம்புத்தூரில் நடைபெறும் தேசிய மாணவர் மோட்டார்ஸ்போர்ட் போட்டியின் 10வது பதிப்பைத் தொடங்கி வைத்தார்.
இந்தப் போட்டியானது ஹைதராபாத்தைச் சேர்ந்த Fraternity of Mechanical and Automotive Engineers எனும் அமைப்பும், கோவை குமரகுரு கல்வி நிறுவனங்களும் இணைந்து நடத்துகின்றன.இந்த போட்டியில் நாடு முழுவதிலும் உள்ள 13 மாநிலங்களைச் சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட கல்லூரிகளில் இருந்து 1000-க்கும் அதிகமான பொறியியல் மாணவர்கள் கலந்துகொள்கின்றனர்.
போட்டியில் பங்கேற்கும் அணிகள், தங்கள் சொந்த கார்ட் ரக கார்கள் மற்றும் பைக்குகளை உருவாக்க வேண்டும்.
அவ்வாறு உருவாக்கப்படும் வாகனங்கள் அக்டோபர் 11 மற்றும் 12 ஆகிய தேதிகளில் நிபுணர்களால் மதிப்பீடு செய்யப்படும்.
இதனைத் தொடர்ந்து,அக்டோபர் 13 முதல் 15 வரை கோயம்புத்தூர் செட்டிப்பாளையத்தில் உள்ள காரி மோட்டார் ரேஸ் ட்ராக்கில் முக்கியப் போட்டி நடைபெறும்.
இதன் துவக்க நிகழ்வு கோவை குமரகுரு கல்வி நிறுவனங்களில் அதன் தலைவர் சங்கர் வானவராயர் முன்பு நடைபெற்றது.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய கே.டி.ராமாராவ்,
தெலங்கானாவில் கடந்த 2023ம் ஆண்டு பார்முலா எப் பந்தயம் நடத்தப்பட்டதின் மூலம், பல்வேறு புதிய முதலீடுகள் ஈர்ப்பட்டுள்ளதாக தெரிவித்தார். மேலும் இப்போட்டிகளின் தாக்கம் காரணமாக தெலங்கானா தலைநகர் ஐதராபாத்தில் மோட்டார் பந்தயங்களுக்கான ஆர்வம் அதிகரித்து இருப்பதோடு, புதிய ஸ்டார்ட்டப் நிறுவனங்களின் எண்ணிக்கையும் அதிகரித்திருப்பதாக அவர் தெரிவித்தார். அமெரிக்காவின் டெஸ்லா, சீனாவின் பைட் (BYD) போன்ற மின்சார கார் தயாரிப்பு நிறுவனங்களைப் போல, இந்தியாவிலும், குறிப்பாக தமிழ்நாடு, தெலங்கானா உள்ளிட்ட தென்னிந்திய மாநிலங்கள் மட்டுமின்றி, இந்தியாவின் பெரும்பான்மை மாநிலங்களிலும் மின்சார கார் உற்பத்திக்கான ஸ்டார்ட்டப் நிறுவனங்கள் உருவாக வாய்ப்பு உருவாகியுள்ளதாக அவர் தெரிவித்தார். வளர்ந்து வரும் மோட்டார் பந்தயங்களுக்கான வரவேற்பு, மின்சார கார் உற்பத்தி மற்றும் அது சார்ந்த புத்தொழில்களையும் ஊக்குவிக்கும் வாய்ப்பு இருப்பதாகவும் தெரிவித்தார்.
பின்னர் மாணவர்கள் தயாரித்துள்ள கார்ட் ரக கார்களை பார்வையிட்ட அவர், அவற்றின் செயல்திறன், உற்பத்தி முறைகள் குறித்து மாணவர்களிடம் கேட்டறிந்தார்.