May 8, 2020
தண்டோரா குழு
கோவையில் குடிபோதையில் காதலியை பற்றி இழிவாக பேசியதால் ஏற்பட்ட தகராறில், இளைஞரை கொலை செய்த அவரது நண்பர் கைது செய்யப்பட்டார்.
தேனியை சேர்ந்த சிவக்குமார் என்பவர், கோவை கணபதி அருகேயுள்ள கே.ஆர்.ஜி. நகரில் வீடு வாடகைக்கு தங்கியுள்ளார். 20 வயதான இவர், மெக்கானிக்காக பணியாற்றி வந்தார். இவருடன் திருப்பூர் மாவட்டம் புகலூர் அருகேயுள்ள பாலத்துறையை சேர்ந்த மணிகண்டன் (23) என்ற கார் மெக்கானிக் தங்கியிருந்தார். சிவக்குமார் காதலித்த பெண்ணுக்கு கடந்த சில மாதங்களுக்கு முன்பு திருமணம் நடந்ததால் மன வேதனையுடன் இருந்துள்ளார்.
இந்நிலையில் நேற்றிரவு சிவக்குமாரும், மணிகண்டனும் சேர்ந்து மது அருந்தியுள்ளனர். அப்போது சிவக்குமாரின் காதலி குறித்து மணிகண்டன் இழிவாக பேசியதாக கூறப்படுகிறது.இதனால் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.அப்போது சிவகுமார் மணிகண்டனிடம் தூங்கும் போது கொலை செய்துவிடுவதாக கூறியுள்ளார்.இதைத் தொடர்ந்து இருவரும் தூங்க சென்று விட்டனர்.
இதனிடையே சிவக்குமார் தன்னைக் கொலை செய்து விடுவார் என்ற பயத்தில், வீட்டில் இருந்த உடற்பயிற்சி செய்யும் எடை கல்லை எடுத்து தூங்கிக்கொண்டிருந்த சிவக்குமாரின் தலையில் தாக்கினார். இதில் பலத்த காயமடைந்த சிவகுமார் பரிதாபமாக உயிரிழந்தார்.
பின்னர் மணிகண்டன் அங்கிருந்து தப்பிச் சென்றார்.இதுகுறித்து பக்கத்து வீட்டார் அளித்த தகவலின் பேரில் வந்த சரவணம்பட்டி காவல் துறையினர்,சிவகுமாரின் உடலை மீட்டு கோவை அரசு மருத்துவமனைக்கு உடற்கூராய்விற்காக அனுப்பி வைத்தனர்.இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் மணிகண்டனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.