• Download mobile app
10 Sep 2025, WednesdayEdition - 3500
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கீழடி அகழாய்வுப் பணிகளை கை விடுவதா? மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம்

October 9, 2017 தண்டோரா குழு

கீழடி அகழாய்வுப் பணிகளை கை விடுவதற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் ஜி. ராமகிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

சிவகங்கை மாவட்டம் கீழடியில் கடந்த 2 ஆண்டுகளுக்கு மேலாக நடைபெற்று வந்த தொல்லியியல் ஆய்வுப் பணிகளை மத்திய அரசு கைவிட்டு, தோண்டப்பட்ட குழிகளை மூடியுள்ளதோடு, அமைக்கப்பட்ட கூடாரங்களையும் காலி செய்துள்ளது. மத்திய அரசின் இந்நடவடிக்கை வன்மையாகக் கண்டிக்கத்தக்கது.

தமிழக மக்களும் தொடர்ந்து வலியுறுத்தி வந்த போதிலும் கீழடி அகழாய்வுப் பணிகளை கைவிட்டிருப்பது மத்திய பாஜக அரசின் தீய நோக்கத்தை வெளிப்படுத்துவதாக அமைந்துள்ளது.

கடந்த ஒரு ஆண்டு காலமாகவே இந்த அகழாய்வுப் பணிகளை மத்திய அரசு முடக்கவும், கைவிடவும் திட்டமிட்டு செயல்பட்டு வந்துள்ளது. கடந்த 2 ஆண்டுகளில் கீழடி பகுதியில் 103 குழிகள் தோண்டப்பட்டு 2500 ஆண்டுகளுக்கு முந்தைய திராவிட மற்றும் தமிழ் நகர நாகரீகம் குறித்த ஆதாரங்கள் வெளிப்பட்டுக் கொண்டிருந்தன.

இந்நிலையில் இந்த ஆண்டு இதுவரை 8 குழிகள் மட்டுமே தோண்டப்பட்டன. இந்நிலை இதனை முடிவுக்கு கொண்டு வர மத்திய அரசு திட்டமிட்டிருந்தது என்பதற்கான தெளிவான அடையாளமாகும்.
கீழடி அகழாய்வுப் பணிகளை மத்திய அரசு கைவிட்டிருப்பதற்கான நோக்கம் தெளிவானது.

மத்தியில் ஆள்பவர்கள் தங்களது இந்துத்துவா கோட்பாடுகளுக்கு துணை போவதற்காக உருவாக்கப்பட்ட புனைவுகளை வரலாறாக மாற்ற முயற்சிகள் மேற்கொண்டுள்ள நிலையில், அதற்கு மாறானதும் வரலாற்றுக் கலாச்சார உண்மைகளை வெளிப்படுத்துவதுமான ஆய்வுகளை கைவிட்டுள்ளனர். இச்செயல் கண்டிக்கத்தக்கது மட்டுமல்ல அநாகரீகமானதுமாகும்.

மத்தியில் ஆளும் சங்பரிவார் கூட்டம் வலியுறுத்தும் சரஸ்வதி நாகரீகத்தை மறுக்கக் கூடிய வகையில் திராவிட, தமிழ் நகர நாகரீக அடையாளங்கள் கீழடி ஆய்வுகள் மூலம் வெளிப்பட்டுக் கொண்டிருந்தன என்பதே உண்மை. 2005ம் ஆண்டு நிறைவு பெற்ற ஆதிச்சநல்லூர் ஆய்வுகளை இதுவரை வெளியிடாததன் நோக்கமும் இதுவே.

எனவே மத்திய அரசு கீழடியில் கைவிடப்பட்டுள்ள அகழாய்வுப் பணிகளை மீண்டும் தொடங்குமாறும், அதற்கான நிதி மற்றும் தேவையான ஆய்வாளர்களை ஒதுக்குமாறும் மத்திய அரசை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு வலியுறுத்துகிறது. தமிழக அரசு மத்திய அரசின் இந்நடவடிக்கையை வேடிக்கை பார்க்காமல் மத்திய அரசுக்கு உரிய நிர்ப்பந்தத்தை கொடுக்க வேண்டும்.

மத்திய அரசின் தவறான செயலை கண்டிக்க முன்வருமாறு அனைத்து ஜனநாயக சக்திகளையும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு கேட்டுக் கொள்கிறது. என அறிக்கையில் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்க