March 6, 2026
தண்டோரா குழு
இந்தியாவில் இதய நோய்கள் நகரங்களில் வசிப்பவர்களுக்கு மட்டுமே ஏற்படும் என்ற பொதுவான கருத்து இப்போது மாறி வருகிறது.கேஎம்சிஹெச் மருத்துவமனை மற்றும் கேஎம்சிஹெச் ஆராய்ச்சி அறக்கட்டளை இணைந்து நடத்திய ‘ரீச் ரூரல் இந்தியா’ (REACH Rural India) என்ற ஆய்வில், கிராமப்புறங்களில் ஆரோக்கியமாகத் தென்படும் பலருக்கு ஆரம்பக்கட்ட இதய நோய்க்கான அறிகுறிகள் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.இந்த ஆய்வு முடிவுகள் உலகப் புகழ்பெற்ற ‘தி லான்செட்’ (The Lancet) மருத்துவ இதழில் வெளியாகியுள்ளன.
முக்கியக் கண்டுபிடிப்பு: நான்கில் ஒருவருக்கு பாதிப்பு
கோவை மற்றும் திருப்பூர் மாவட்டங்களைச் சுற்றியுள்ள கிராமப்புறங்களில் 35 முதல் 65 வயதுக்குட்பட்ட 3,000-க்கும் மேற்பட்டோரிடம் இந்த ஆய்வு நடத்தப்பட்டது. ‘சி.ஏ.சி ஸ்கோர்’ (CAC score) எனப்படும் ரத்த நாளங்களில் உள்ள சுண்ணாம்புப் படிவங்களைக் கண்டறியும் நவீன பரிசோதனை மூலம் பின்வரும் தகவல்கள் தெரியவந்துள்ளன:
கிராமப்புறங்களில் எவ்வித அறிகுறிகளும் இன்றி ஆரோக்கியமாக இருப்பவர்களில் 25.6% பேருக்கு (நான்கில் ஒருவர்) இதய ரத்த நாளங்களில் பாதிப்பு இருப்பது உறுதியாகியுள்ளது. பெண்களை விட (18.5%) ஆண்களுக்கே (33.5%) இந்த பாதிப்பு அதிகமாக உள்ளது. இந்தப் பாதிப்பு உள்ளவர்களில் 83%-க்கும் அதிகமானோருக்கு நீரிழிவு, உயர் ரத்த அழுத்தம் அல்லது அதிக கொழுப்பு போன்ற ஏதேனும் ஒரு குறைபாடு ஏற்கனவே இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
“இதய நோய் என்பது இனி நகரங்களுக்கு மட்டும் உரியது அல்ல” என்று இந்த ஆய்வின் முதன்மை ஆய்வாளர் டாக்டர் தாமஸ் அலெக்சாண்டர் கூறுகிறார். கிராமப்புற மக்களின் வாழ்க்கை முறையில் ஏற்பட்டுள்ள மாற்றங்களே இதற்குக் காரணம் என்றும், அறிகுறிகள் இல்லாமலேயே ரத்த நாளங்களில் பாதிப்புகள் ஏற்படுவதை இந்த ஆய்வு காட்டுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
இந்த ஆய்வு முடிவுகள் பயமுறுத்துவதற்காக அல்ல, மாறாக ஒரு ‘எச்சரிக்கை மணி’யாக எடுத்துக்கொள்ள வேண்டும் என ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். முன்கூட்டியே கண்டறிவதன் மூலம் மாரடைப்பு ஏற்படுவதற்கு முன்பே அதைத் தடுக்க முடியும். உணவு முறை மாற்றம், முறையான உடற்பயிற்சி மற்றும் மருத்துவர்களின் ஆலோசனையைப் பின்பற்றுவதன் மூலம் பெரிய ஆபத்துகளிலிருந்து தப்பிக்கலாம் என டாக்டர் எஸ். மோகன்ராஜ் மற்றும் டாக்டர் மேத்யூ செரியன் தெரிவித்தனர்.
இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ICMR) ஆதரவுடன் நடத்தப்பட்ட இந்த ஆய்வு, கிராமப்புற இந்தியாவில் மேற்கொள்ளப்பட்ட இது போன்ற ஆய்வுகளில் மிகப்பெரிய ஒன்றாகும். இதன் முக்கிய ஆராய்ச்சிக் குழுவில் திரு. அவினாஷ் குமார், டாக்டர் தாமஸ் அலெக்சாண்டர், டாக்டர் எஸ். மோகன்ராஜ், டாக்டர் மேத்யூ செரியன், டாக்டர். புதியவன், டாக்டர் அருள்ராஜ் ராமகிருஷ்ணன் மற்றும் டாக்டர் வேல்முருகன் ஆகியோர் இடம் பெற்றிருந்தனர்.
இந்த முக்கியமான ஆய்வுக்காகக் குழுவினரைப் பாராட்டிப் பேசிய கேஎம்சிஹெச் மருத்துவமனையின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர் டாக்டர் நல்லா ஜி. பழனிசாமி அவர்கள் கூறியதாவது: “உலகத்தரம் வாய்ந்த மருத்துவ வசதிகளைக் கிராமப்புற மக்களுக்கும் கொண்டு சேர்ப்பதே எங்களின் லட்சியம். கிராமங்களில் ‘அறிகுறிகளே இல்லாத’ இதய நோய்கள் அதிகரித்து வருவது ஒரு எச்சரிக்கை மணி. ஒருவரது இருப்பிடம் அவரது ஆயுட்காலத்தைத் தீர்மானிக்கக் கூடாது என்பதில் நாங்கள் உறுதியாக உள்ளோம். இதற்காக நவீனப் பரிசோதனைக் கருவிகளையும், நடமாடும் மருத்துவ வாகனங்களையும் கிராமங்களுக்குக் கொண்டு செல்லத் திட்டமிட்டுள்ளோம்.”
தொடர்ந்து பேசிய கேஎம்சிஹெச் மருத்துவமனையின் செயல் இயக்குநர் டாக்டர் அருண் பழனிசாமி, நோயை முன்கூட்டியே கண்டறிவதன் அவசியத்தை வலியுறுத்தினார்: “இதய நோயை வெல்வதற்கு மிகச்சிறந்த வழி அதனை ஆரம்பத்திலேயே கண்டறிவதுதான். கிராமப்புறங்களில் இதற்கான அறிகுறிகள் பெரும்பாலும் அலட்சியப்படுத்தப்படுகின்றன அல்லது மிகத் தாமதமாகவே கண்டறியப்படுகின்றன. பெரும் பாதிப்பு ஏற்படும் முன்பே, அதிக ஆபத்துள்ள நிலையில் இருப்பவர்களைக் கண்டறிய உள்ளூர் சுகாதாரப் பணியாளர்களுக்குப் பயிற்சி அளித்து வருகிறோம்.” என்றார்.