October 3, 2020
தண்டோரா குழு
கோவையில் கட்டுமான காண்ட்ராக்டர் காரில் வைத்திருந்த 1 லட்சம் ரூபாயை திருடிய கட்டிட மேற்பார்வையாளரை போலீசார் கைது செய்தனர்.
கோவை குறிச்சி சிட்கோ பகுதியை சேர்ந்தவர் மாணிக்கம் (60).விஸ்வகர்மா கன்ஸ்டரக்ஷன் என்ற பெயரில் கட்டுமான தொழில் செய்து வருகிறார். தற்போது, மதுக்கரை பகுதியில் கட்டுமான பணி நடைபெறுவதையொட்டி, அங்கு பணியாற்றும் ஆட்களுக்கு சம்பள பணம் கொடுக்க தனது காரில் பணத்தை எடுத்துகொண்டு சென்றுள்ளார்.
ஒரு லட்ச ரூபாய் பணத்தை, தனது காரில் வைத்துவிட்டு கட்டிட பணிகளை பார்வையிட சென்றவர், திரும்பி வந்து பார்த்தபோது காரில் இருந்த பணம் திருடு போயுள்ளதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.இது குறித்து, மதுக்கரை போலீஸில் புகார் தெரிவித்தார்.புகார் குறித்து, போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்ட நிலையில், கட்டுமான பணிகள் நடைபெறும் இடத்தில் மேற்பார்வையாளராக பணியாற்றி வந்த சீனிவாசன் (27) தலைமறைவானது தெரியவந்தது.
இதையடுத்து, சீனிவாசனை போலீஸார் தேடி வந்த நிலையில், மதுக்கரை மார்கெட் பகுதியில் சீனிவாசன் நிற்பதாக கிடைக்க பெற்ற தகவலையடுத்து,அங்கு சென்ற போலீசார் அவரை கைது செய்து, அவரிடம் இருந்து ஒரு லட்ச ரூபாயை பறிமுதல் செய்தனர். பின், அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.