July 27, 2018
தண்டோரா குழு
திமுக தலைவர் கருணாநிதி வயது மூப்பு காரணமாக உடல்நிலை சரியில்லை என காவிரி மருத்துவமனை நேற்று (ஜூலை 27) செய்தி வெளியிட்டது.இதனைத்தொடர்ந்து துணைமுதல்வர், அதிமுக அமைச்சர்கள் உள்ளிட்ட தமிழகத்தின் முக்கிய அரசியல் தலைவர்களும், திரைப்படத்துறையினரும் கருணாநிதியின் உடல்நலம் குறித்து விசாரிக்க அவரது கோபலபுர இல்லத்திற்கு படையெடுத்த வண்ணம் உள்ளனர்.இதனால் நேற்று முதல் கோபாலபுரமே பரபரப்பாக இருந்து வருகிறது.
இன்றும் பல்வேறு அரசியல் கட்சிகள் தலைவர்கள் கலைஞரின் உடல்நிலை குறித்து விசாரிக்க வந்த வண்ணம் உள்ளனர். நேற்று,முதல் கருணாநிதியின் கோபாலபுரம் இல்லத்தின் வெளியே தொண்டர்கள் கூடி நின்று கொண்டு ‘தலைவர் வாழ்க’ என கோஷங்களை எழுப்பிக் கொண்டிருந்தனர்.இந்த கூட்டத்திற்கு நடுவே இன்றுகாலை 11 மணியளவில் முகத்தில் சோகத்துடன் 85 வயது மூதாட்டி ஒருவர் நின்று கொண்டிருந்தனர்.
அப்போது, அவரிடம் சிலர் நீங்கள் யார் ஏன் இங்கு வந்தீர்கள் என கேட்டுள்ளனர். அதற்கு என் பெயர் ரத்தினாம்பாள் தலைவர பார்க்கனும்பா டீவியில ராத்திரி பார்த்தேன், ஏதேதோ சொன்னாங்க, மனசு தாங்கல கிளம்பி வந்துட்டேன்… காலையில 10.30 இறக்கி விட்டாங்க அங்கிருந்து கேட்டு கேட்டு பஸ் ஏறி இங்க வந்துட்டேன்’ என கூறியுள்ளார். மேலும், ‘தலைவரை பாக்கனும்… ஒரு ஓரமா நின்னு பாத்துட்டு போய்டுறேன்… எனக்கு கல்யாணம் பண்ணி வச்சதே தலைவர்தான்பா’ என்று கண்ணீரோடு நின்றுள்ளார்.
இதனை கண்ட சென்னை மாவட்ட செயலாளர் சேகர்பாபு அந்த மூதாட்டியை ஸ்டாலினை சந்திக்க வைத்து வெளியே கொண்டு வந்தார். பின்னர் அங்கிருந்து திரும்பிய மூதாட்டி, கருணாநிதி தீவிர மருத்துவ சிகிச்சையால் இருப்பதால் அவரை பார்க்க முடியவில்லை. ஸ்டாலினிடம் அவர் உடல்நிலை குறித்து கேட்டு அறிந்தேன். பின்னர் என்னைப் பற்றி விசாரித்த ஸ்டாலின் வழிச்செலவிற்கு பணம் கொடுத்ததாக தெரிவித்தார்.