July 24, 2020
தண்டோரா குழு
கறுப்பர் கூட்டம் யூட்யூப் சேனல் நிர்வாகிகளை குண்டர் சட்டத்தில் கைது செய்ய வலியுறுத்தி கோவையில் பா.ஜ.க.,வினர் காவடி எடுத்து ஆட்டம் போட்டு இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
கந்த சஷ்டி கவசம் குறித்து கறுப்பர் கூட்டம் என்ற யூட்யூப் சேனலில் விமர்சித்து வீடியோ வெளியிடப்பட்டது. தமிழகத்தில் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதற்கு பலரும் தங்களது கண்டனங்களை பதிவு செய்து வருகின்றனர். இந்த நிலையில், கறுப்பர் கூட்டம் சேனலுக்கு எதிர்ப்பு தெரிவித்து கோவையில் பா.ஜ.க.,வினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். சித்தாபுதூர் பகுதியில் உள்ள பா.ஜ., மாவட்ட தலைமை அலுவலகம் முன்பு நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டதில் அக்கட்சியினர் காவடி ஏந்தி, முருக கடவுள் பாடலை பாடி, மேலதாளம் முழங்க ஆட்டம் போட்டு ஆர்ப்பாட்டம் நடத்தினர் .
தொடர்ந்து அக்கட்சியின் மாவட்ட தலைவர் நந்தகுமார் செய்தியாளர்களிடம் கூறுகையில்,
“கறுப்பர் கூட்டத்தை கூண்டோடு கைது செய்ய வேண்டும். தைப்பூசத் திருவிழாவை அரசு விடுமுறையாக அறிவிக்க வேண்டும். திமுக இந்துக்களுக்கு எதிராக செயல்படுகிறது. இந்துக்கள் அனைவரும் ஓரணியில் திரள வேண்டும்.” என்றார்