• Download mobile app
02 May 2024, ThursdayEdition - 3004
FLASH NEWS
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கன்னட மக்களிடம் மன்னிப்பு கேட்டு கொள்கிறேன்- நடிகர் சத்யராஜ்

April 21, 2017 தண்டோரா குழு

கன்னட மக்களை புண்படும் விதமாக பேசி இருந்தால் அதற்காக கன்னட மக்களிடம் மன்னிப்பு கேட்டு கொள்கிறேன். அதே சமயம் தமிழக மக்களின் நியாயமான கோரிக்கைகளுக்கு எனது குரல் ஓங்கி ஒலித்து கொண்டு தான் இருக்கும் என்பதையும் தெரிவித்து கொள்கிறேன் என்று நடிகர் சத்யராஜ் கூறியுள்ளார்.

பாகுபலி 2 படத்தை கர்நாடகாவில் திரையிட கன்னட அமைப்புகள் அனுமதி மறுத்து போராட்டங்களை நடத்தி வருகின்றன. 9 வருடங்களுக்கு முன் காவிரி விவகாரத்தில் நடிகர் சத்யராஜ் பேசிய பேச்சுக்கு மன்னிப்புக் கேட்க வேண்டும் என்றும் அந்த அமைப்புகள் கூறி வருகின்றன.

இது தொடர்பாக நடிகர் சத்தியராஜ் வீடியோ ஒன்றில் பேசியதாவது;

“ 9 வருடங்களுக்கு முன் காவிரி விவகாரத்தில் கர்நாடகாவில் தமிழ் மக்கள் தாக்கப்பட்டார்கள். இது தொடர்பாக தமிழ் திரையுலகம் சார்பில் நடந்த கண்டன போராட்டத்தின் போது நான் உட்பட பல திரையுலகினர் தங்களது கண்டனங்களை பதிவு செய்திருந்தனர்.

இதற்காக எனது உருவப்பொம்பை எரிக்கப்பட்டது, கன்னட திரையுலகினர் சிலரும் ஆவேசமாக பேசியிருந்தனர். அதில் நான் பேசிய கருத்து கன்னட மக்களை புண்படுத்துவதாக நான் அறிகிறேன். அதற்காக 9 வருடங்களுக்கு பிறகு கன்னட மக்களிடம் மன்னிப்பு கேட்டு கொள்கிறேன்.

இதற்காக என் மீது அக்கறை கொண்ட தமிழ் ஆர்வலர்களும், தமிழ் மக்களும், நலம்விரும்பிகளும் என் மீது வருத்தம் கொள்ள வேண்டாம் என்று கேட்டு கொள்கிறேன்.

பாகுபலி என்ற மிகப்பெரிய படத்தில் ஒரு சிறிய தொழிலாளி தான் நான். என் ஒருவனுக்காக பல ஆயிரம் பேரின் உழைப்பு மற்றும் பணம் விரையமாக விரும்பவில்லை. அதுமட்டுமல்ல பாகுபலி-2வை கர்நாடகாவில் வாங்கிய விநியோகஸ்தர்கள், தியேட்டர் அதிபர்கள் நஷ்டமடைய வேண்டாம்.

இனி வரும் காலங்களில் தமிழக மக்களின் பிரச்னையாக இருந்தாலும், விவசாயிகளின் பிரச்னையாக இருந்தாலும் சரி தமிழர்களின் அனைத்து நியாயமான கோரிக்கைகளுக்கு எனது குரல் ஓங்கி ஒலித்து கொண்டு தான் இருக்கும் என்பதை தெளிவாக தெரிவித்து கொள்கிறேன்.

இனி வரும் காலங்களில் என்னை வைத்து படம் தயாரித்தால் பிரச்னை வரும் என்று கருதும் தயாரிப்பாளர்கள், இந்த சின்ன நடிகனான சத்யாரஜை யாரும் தங்களது படங்களில் நடிக்க வைக்க வேண்டாம். என்னை யாரும் அணுக வேண்டாம், என்னால் யாரும் நஷ்டப்பட வேண்டாம் என்று தாழ்மையுடன் கேட்டு கொள்கிறேன்.

ஒரு நடிகனாக இருப்பதை விட, இறப்பதை விட எந்தவித மூட நம்பிக்கையும் இல்லாமல் ஒரு தமிழனாக இருப்பதும், இறப்பதும் எனக்கு மகிழ்ச்சி.

எனது வருத்தத்தை மனப்பூர்வமாக ஏற்றுக்கொண்டு பாகுபலி-2 படத்தை வெளியிட கர்நாடக மக்கள் ஒத்துழைக்க வேண்டும்படி கேட்டு கொள்கிறேன். என் உணர்வுகளை புரிந்து கொண்டு எனக்கு உறுதுணையாக இருந்த தமிழக மக்கள், நடிகர் சங்கம், தயாரிப்பாளர்கள் சங்கம் உள்ளிட்ட அனைவருக்கும் என் நன்றியை தெரிவித்து கொள்கிறேன்.

என்னால் ஏற்பட்ட தொல்லைகளை பொறுத்து கொண்ட இயக்குநர் ராஜமெளலி மற்றும் பாகுபலி தயாரிப்பாளர்கள் மற்றும் படக்குழுவினர் அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றியை தெரிவித்து கொள்கிறேன்.”

இவ்வாறு சத்யராஜ் பேசினார்.

மேலும் படிக்க