July 26, 2020
தண்டோரா குழு
கோவை போத்தனூர் அருகே பட்டப்பகலில் சாலையில் நிறுத்தி வைத்த இரு சக்கர வாகனத்தை அங்கு வந்த மர்ம நபர் ஒருவர் கண்ணிமைக்கும் நேரத்தில் திருடிச் செல்லும் சி.சி.டி.வி காட்சி வைரல் ஆகி வருகிறது.
கோவை போத்தனூர் திருமறைநகர் பகுதியை சேர்ந்தவர் சுபேர் (48). நேற்று சுபேரின் தந்தை இரு சக்கர வாகனத்தில் குறிச்சி பிரிவு போத்தனூர் சாலையில் உள்ள மளிகை கடை வாசலில் வண்டியை நிறுத்தி விட்டு, பொருட்களை வாங்கச் சென்றுள்ளார். பின் மீண்டும் திரும்பி வந்து பார்த்த போது இரு சக்கர வாகனம் மாயமானது தெரியவந்தது.
இதையடுத்து மளிகை கடையில் பொருத்தியிருந்த சி.சி.டி.வி கேமராவை ஆய்வு செய்த போது பேக் அணிந்து வந்த மர்ம நபர் ஒருவர் நடந்து வந்து கண்ணிமைக்கும் நேரத்தில் இரு சக்கர வாகனத்தை திருடிச் சென்றது தெரியவந்தது. இதையடுத்து சுபேர் கொடுத்த புகாரின் பேரில் போத்தனூர் குற்றப்பிரிவு போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்..