December 29, 2018
தண்டோரா குழு
சென்னையை அடுத்த பூந்தமல்லியில் 6 வயது மகனை கழுத்தை நெரித்துக் கொடூரமாக கொலை செய்து தீவைத்து எரித்த கொலைகார தாயை போலீசார் கைது செய்தனர்.
சென்னை பூந்தமல்லி அடுத்த கரையான்சாவடியை சேர்ந்த மீனாட்சி என்பவரும், கிருஷ்ணகிரியை சேர்ந்த சரவணன் என்பவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். தம்பதியினருக்கு ஜெயகாந்தன் என்ற 6 வயது மகன் இருந்துள்ளார். இதற்கிடையில், கணவன் – மனைவி இடையே அடிக்கடி பிரச்சனை ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இதுபோல நேற்று முன் தினமும் அவர்களுக்குள் சண்டை ஏற்பட்டுள்ளது. அப்போது மீனாட்சி தனது மகனுடன் தன் பெற்றோர் வீட்டிற்கு சென்றுள்ளார். ஆனால் பெற்றோர் அவரை வீட்டில் சேர்க்கவில்லை என்று கூறப்படுகிறது. இதனால்,வீட்டின் பின்புறம் உள்ள மோட்டோர் ரூம் போன்ற அறையில் தனது மகனுடன் மீனாட்சி தங்கியுள்ளார்.
இதையடுத்து, குடும்ப தகராறு காரணமாக மனமுடைந்து தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்துள்ளார். இதனையடுத்து அவரது 6 வயது மகன் ஜெயகாந்தை எரித்து கொலை செய்த பின்னர், தற்கொலை செய்ய முயன்றதாக கூறப்படுகிறது. தற்கொலை செயலில் ஈடுபட அச்சமடைந்ததால், அவரே போலீசாருக்கு தகவல் அளித்துள்ளார்.இதனையடுத்து சிறுவனின் சடலத்தை மீட்ட போலீசார், மீனாட்சியை கைது செய்தனர்.
மகனைக் கொலை செய்து விட்டு, மாங்காடு சென்று கோவிலில் அவர் மொட்டை அடித்துள்ளதாகவும் போலீசார் கூறியுள்ளனர். மீனாட்சியிடம் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.