August 27, 2020
தண்டோரா குழு
கேரளாவில் 10 தினங்கள் கொண்டாடப்படும் ஓணம் பண்டிகையை முன்னிட்டு வண்ண வண்ண பூக்களால் கோலம் இட்டு, பல்வேறு நிகழ்ச்சிகளை கேரள மக்கள் நடத்தி வருகின்றனர். கேரளாவில் ஓணம் திருவிழா விமர்சையாக நடக்கிறது. இதை முன்னிட்டு கடந்த 3 தினங்களாக கோவை மார்க்கெட்டில் காய்கறிகள் விற்பனை சூடுபிடித்துள்ளது. கேரளாவின் காய்கறி கொள்முதலில் கோவை மார்க்கெட்டில் ஓணம் விற்பனை எப்போதுமே கூடுதலாக காணப்படும்.
கோவை மாவட்டத்தில் உள்ளூர் பகுதிகளில் விளையும் காய்கறிகள் மட்டுமின்றி, கர்நாடகா, மும்பையில் இருந்து வரவழைக்கப்படும் காய்கறிகளும் அதிகளவில் கேரளாவிற்கு அனுப்பப்பட்டு வருகின்றன. கோவை மார்க்கெட்டில் இருந்து வழக்கமாக 10 முதல் 15 லாரிகளில் காய்கறிகள் செல்லும். ஓணம் பண்டிகை வருவதையொட்டி 30க்கும் மேற்பட்ட லாரிகள் காய்கறிகளோடு கேரளாவிற்கு கிளம்பி சென்றன. கேரள வியாபாரிகள் மார்க்கெட்டில் குவிந்து தங்களுக்கு தேவையான காய்கறிகளை மூடை, மூடையாக வாங்கி சென்றனர்.
கேரளாவில் ஓணம் பண்டிகைக்கு சாம்பார் காய்கறிகளான கேரட், பீன்ஸ், உருளை, போன்றவை அதிகளவில் கொள்முதல் செய்யப்பட்டன. உள்ளூர் காய்கறிகளான வெண்டை,பூசணி, வெள்ளரி,தக்காளி, கத்தரிக்காய் உள்ளிட்ட காய்கறிகளையும் அதிகளவில் கேரளாவுக்கு அனுப்பி வைத்தனர். கேரளாவிற்கு அதிகளவு காய்கறி செல்வதால் விலையும் சற்று உயர்ந்து காணப்படுகிறது இதனால் விவசாயிகள் மிகவும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.