• Download mobile app
19 Apr 2024, FridayEdition - 2991
FLASH NEWS
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

என்னை விமர்சனம் செய்வதுபற்றி நான் ஒருபோதும் கவலைப்படவில்லை – மு.க.ஸ்டாலின் பேச்சு

August 24, 2022 தண்டோரா குழு

விமர்சனம் என்கிற பெயரில் தமிழகத்தின் வளர்ச்சிக்கு குந்தகம் விளைவித்தால் அதை நான் ஒருபோதும் அனுமதிக்க மாட்டேன் என கோவை விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசினார்.

IMG-20220823-WA0148

கோவை-பொள்ளாச்சி மெயின் ரோடு ஈச்சனாரி பகுதியில் திறந்தவெளி மைதானத்தில் அரசுத்துறைகள் சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா இன்று காலை நடந்தது. கோவை மாவட்ட கலெக்டர் சமீரன் வரவேற்றார். விழாவில், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்று, பல்வேறு அரசு துறைகள் சார்பில் ரூ.589 கோடி மதிப்பில் 1,07,410 பேருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கினார். பின்னர், ரூ.271 கோடி மதிப்பில் முடிவுற்ற 288 திட்டப்பணிகளை துவக்கிவைத்தார்.
ரூ.663 கோடி மதிப்பில் 748 புதிய பணிகளுக்கு அடிக்கல் நாட்டிவைத்தார்.

இதன்பின்னர், முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:

தமிழகத்தில் ஆட்சி மாற்றம் நடந்தபிறகு, கடந்த 15 மாதங்களில் கோவை மாவட்டத்துக்கு நான் தற்போது ஐந்தாவது முறையாக வந்துள்ளேன். இந்த மாவட்டத்தின் மீதும், இங்குள்ள மக்கள் மீதும் நான் வைத்துள்ள அன்பின் அடையாளம் இது. இந்த விழாவை அரசு விழா என்று சொல்வதைவிட கோவையின் மாநாடு என்று சொல்லும் அளவுக்கு சிறப்பாக நடந்துவருகிறது. திமுக ஆட்சியின் மீது இந்த மாவட்ட மக்கள் எந்த அளவுக்கு மதிப்பு, மரியாதை வைத்துள்ளார்கள் என்பதற்கு இந்த மாநாடே சாட்சியாக உள்ளது. எதிர்கால தேர்தல் முடிவு எப்படி இருக்கும் என்பதை உங்கள் முகங்களில் உள்ள மலர்ச்சி மூலமாக, மகிழ்ச்சி மூலமாக நான் அறிந்துகொண்டேன்.

கோவை வஉசி மைதானத்தில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 22ம்தேதி நடந்த அரசு நலத்திட்ட உதவி வழங்கும் விழாவில் நான் கலந்துகொண்டேன். அதற்குள் இரண்டாவது நிகழ்ச்சியை அமைச்சர் செந்தில் பாலாஜி ஏற்பாடு செய்துவிட்டார். அவரை எவ்வளவு பாராட்டினாலும் போதாது. அவருக்கு துணை நிற்கும் அனைத்து அரசுத்துறை அதிகாரிகளுக்கும் நான் பாராட்டு தெரிவித்துக்கொள்கிறேன்.
கோவை என்றாலே பிரம்மாண்டம்தான்.

தென்னிந்தியாவின் மிக முக்கியமான தொழில் நகரம் இந்த கோவை. பெரும் தொழில் நகரம் மட்டும் அல்ல. குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களும் இங்கு ஏராளமாக உள்ளன. பல லட்சம் தொழிலாளர்களுக்கு வாழ்வுஅளிப்பது மட்டுமல்ல, தமிழ்நாட்டின் ஏற்றுமதி, இறக்குமதி குறியீடு பலமாக இருக்கும் அளவுக்கு கோவை மாவட்டம் உயர்ந்துள்ளது. எந்த தொழில்தான் இங்கு இல்லை? நூற்பாலைகள், விசைத்தறிகள், பவுண்டரிகள், வெட்கிரைண்டர்கள், மோட்டார் பம்புகள், உதிரிபாகங்கள் தயாரிப்பு, நகை தயாரிப்பு, தென்னை நார் சார்ந்த தொழில், உணவு பதப்படுத்துதல் என அடுக்கிக்கொண்டே போகலாம். அந்த அளவுக்கு தொழில் நகரமாக உள்ளது கோவை மாவட்டம்.

தமிழக அரசு மூன்று தொலைநோக்கு பார்வையுடன் செயல்பட்டு வருகிறது. அதாவது, முடிவுற்ற பணிகளை துவக்கி வைப்பது, புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுவது, மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்குவது என இந்த மூன்று திட்டமிடுதல் நிகழ்வுடன் இந்த அரசு விழா நடக்கிறது.தமிழகத்தில் வேறு எங்கும் இல்லாத அளவுக்கு ஒரே மாவட்டத்தில், ஒரே மேடையில் ரூ.539 கோடி மதிப்பீட்டில் 1,07,410 பேருக்கு இன்று நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளன. இது மிகப்பெரிய சாதனை. நாம் என்ன சாதனை செய்தோம் என சிலர் கேட்கிறார்கள். அவர்களுக்கு நெஞ்சை நிமித்தி பதில் சொல்வேன். இதுதான் அந்த சாதனை.

இன்று மட்டும் ரூ.663 கோடி மதிப்பில் 748 புதிய பணிகளுக்கு அடிக்கல் நாட்டியுள்ளேன். ரூ.271 கோடி மதிப்பில் 228 முடிவுற்ற பணிகளை துவக்கி வைத்துள்ளேன். கடந்த ஓராண்டில் மட்டும் கோவை மாவட்டத்தில் 1,38,185 பேருக்கு அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளது. இப்படி, கணக்கிட முடியாத உதவிகளை செய்து வரும் அரசுதான் திமுக அரசு. கோவை மாவட்டத்துக்கு கடந்த ஓராண்டில் என்னென்ன பணிகள் செய்யப்பட்டுள்ளன என்ற சாதனை பட்டியல் என்னிடம் உள்ளது.

கோவைக்கு கடந்த முறை வந்தபோது, தொழில்முனைவோர்களுடன் 3 மணி நேரம் கலந்துரையாடல் நடத்தினேன். அதன் தொடர்ச்சியாகத்தான் இந்த விழா நடக்கிறது. மாநகரில் பழுதடைந்த சாலைகளை மேம்படுத்த ரூ.200 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. கோவை மத்திய சிறையை இடமாற்றம் செய்துவிட்டு, அங்கு ரூ.200 கோடியில் செம்மொழி பூங்கா விரைவில் அமைய உள்ளது. சிறுவாணி அணையில் இருந்து, கோவை மக்களுக்கு கூடுதல்ர தண்ணீர் திறந்துவிட வேண்டும் என கேரளா முதல்வரிடம் கடிதம் மூலம் கேட்டுக்கொண்டேன். தொலைபேசி வாயிலாகவும் பேசினேன். உடனடியாக தண்ணீர் திறந்து விடப்பட்டது.

கோவையில் மெட்ரோ ரயில் திட்டத்தை நிறைவேற்ற, விரிவான திட்ட அறிக்கை தயார் செய்யப்பட்டு வருகிறது. சென்னையைப்போல், இங்கும் கட்டிட வரன்முறை பணிகளை மேற்கொள்ள ”கோவை மாநகர வளர்ச்சி குழுமம்” உருவாக்கப்பட்டுள்ளது.நாட்டிலேயே அதிக முதலீடுகளை ஈர்த்து, அதிக தொழில்வாய்ப்பு மற்றும் வேலைவாய்ப்புகளை உருவாக்கி வருகிறது தமிழக அரசு. அனைத்து துறையிலும் முன்னேறி வரும் மாநிலமாக தமிழ்நாடு உள்ளது. இதை, ஒரு ஆங்கில நாளேடு பாராட்டி, எழுதியுள்ளது. நான், டெல்லி சென்றபோது, அங்குள்ள தலைவர்கள், தமிழகம் மீது உயர்ந்த கருத்து பரவலாக வைத்திருப்பதை நான் உணர்ந்தேன். தந்தை பெரியாரும், பேரறிஞர் அண்ணாவும், தலைவர் கலைஞர் உருவாக்கி தந்த அடித்தளத்தின் மூலம் திமுக அரசு இந்த சாதனையை செய்துள்ளது.

கழகம் கடந்துவந்த பாதை கடினமானது. தேர்தல் நேரத்தில் அளித்த எந்த வாக்குறுதியையும் திமுக அரசு நிறைவேற்றவில்லை என இங்குள்ள சிலர், பொத்தாம் பொதுவாக கூறி வருகிறார்கள். நீங்கள் மக்களோடு மக்களாக வந்து, பார்த்தால்தான் கழக அரசின் திட்டப்பணிகள் உங்களுக்கு தெரியவரும். பேட்டி கொடுப்பதற்காக மட்டும் வீட்டை விட்டு வெளியே வரக்கூடாது. இந்த அரசின் மூலம் தமிழக மக்கள் அடைந்த நன்மை பற்றிய அறிய வேண்டுமானால், நீங்கள் வீட்டை விட்டு வெளியே வர வேண்டும்.
நன்றி மறவாத தன்மையுடன் இந்த ஆட்சி நடக்கிறது. இதை ஏற்றுக்கொள்ள முடியாமல், சிலர் புலம்பிக்கொண்டு இருக்கிறார்கள். அவர்களுக்கு நான் பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. தந்தை பெரியார் சொன்னதுபோல், தன்மானம் இல்லாத நபர்கள்… இனமானம் இல்லாத நபர்களிடம் நாம் பாராட்டு சான்றிதழ் பெற வேண்டியதில்லை. திமுக ஆட்சி, ஒடுக்கப்பட்ட மக்களுக்கான ஆட்சி, அடக்கப்பட்ட மக்களுக்கான ஆட்சி, பிறப்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட மக்களுக்கான ஆட்சி, பழங்குடியின மக்களுக்கான ஆட்சி, சிறுபான்மை மக்களுக்கான சகோதரத்துவ அரசு. எல்லோருக்கும் எல்லாம் என்ற சமநிலையை உருவாக்கும் அரசு இது. ஒரு தாய், தனது எல்லா பிள்ளைகளையும் ஒரே மாதிரியாக பேணுவதுபோல், திமுக அரசு எல்லா மக்களையும் பாதுகாத்து பேணி வருகிறது.

நான் கோவைக்கு புறம்படும்முன் அனைத்து கட்சி எம்எல்ஏக்களுக்கம் ஒரு கடிதம் எழுதி அனுப்பிவிட்டுதான் வந்தேன். அதாவது, உங்கள் தொகுதியில் நிறைவேற்றப்படாமல் இருக்கும் முக்கியமான பத்து திட்டங்களை அந்தந்த மாவட்ட கலெக்டர்களிடம் 15 நாட்களுக்குள் கொடுக்க வேண்டும். இதை நிறைவேற்ற திமுக அரசு அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளும் என அந்த கடிதத்தில் எழுதியுள்ளேன். திமுக எம்எல்ஏக்களுக்கு மட்டுமல்ல, 234 தொகுதி எம்எல்ஏ.க்களுக்கும் இந்த கடிதம் அனுப்பியுள்ளேன். இந்தியாவில் வேறு எந்த மாநிலத்திலும் இல்லாத முன்னோடி திட்டம் இது. இதை நான் பெருமையாக சொல்கிறேன்.
எதிர்கட்சி எம்எல்ஏக்களும் என்னை பாராட்ட வேண்டும் என்பதற்காக இதை செய்யவில்லை. ஏனெனில், எதையும் எதிர்பார்த்து கடமை ஆற்றுபவன் இந்த ஸ்டாலின் இல்லை. சிலர் காழ்ப்புணர்ச்சியோடு தூற்றுகிறார்கள். நான் அவர்கள் மீது கோபம் கொள்ளவில்லை. அவர்களும் பிழைக்கட்டும் என நான் எண்ணிக்கொள்கிறேன். கவிஞர் கண்ணதாசன் சொன்னது போல், ”போற்றுவோர் போற்றட்டும், புழுதிவாரி தூற்றுவோர் தூற்றட்டும்” என்ற எண்ணத்துடன் நான் பணியாற்றி வருகிறேன்.

இங்கு வரும்போது மக்கள் வழிநெடுக நின்று வரவேற்பு அளித்தார்கள். நான், அளவற்ற மகிழ்ச்சி அடந்தேன். ஏழையின் சிரிப்பில் இறைவனை காண்போம் என்றார் அண்ணா. அவர் சொன்னதுபோலவே இங்குள்ள மக்கள் முகத்தில் சிரிப்பை பார்த்து ெநகிழ்ந்து போனேன். நான் விமர்சனத்தில் வளர்ந்தவன். என்னை விமர்சனம் செய்வதுபற்றி நான் ஒருபோதும் கவலைப்படவில்லை. எதிர்ப்பை, அடக்குமுறையை மீறி வளர்ந்தவன் நான். அதே நேரத்தில், எதிர்ப்பு, விமர்சனம் என்ற பெயரில் யாரேனும் தமிழகத்தின் வளர்ச்சிக்கு குந்தகம் விளைவித்தால், அதை நான் ஒருபோதும் அனுமதிக்க மாட்டேன்.
சிலர், தங்களது கையாலாகாத தினத்தை மறைப்பதற்கு திமுக ஆட்சி மீது குறை சொல்லி வருகிறார்கள். அப்படி குறைசொல்வதற்கான தகுதியும், யோக்கியதையும் அவர்களுக்கு கிடையாது. தமிழகத்தில் கடந்த ஒரு வருட காலத்திலேயே இத்தனை திட்டங்கள் என்றால், ஐந்து வருட காலத்தில் இன்னும் எத்தனை திட்டங்கள் வரும். இந்தியாவில் முதன்மையான மாநிலமாக தமிழகம் மாறும். அதனை அறிவிக்கும் மாநாடுதான், இந்த மாநாடு. இந்த ஆட்சிக்கு நீங்கள் என்றும் பக்கபலமாக இருக்க வேண்டும்.

இவ்வாறு முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசினார்.

விழாவில், மின்சார துறை அமைச்சர் செந்தில்பாலாஜி, செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன், ஆதி திராவிடர் நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ், கோவை தொகுதி எம்.பி., பி.ஆர்.நடராஜன், பொள்ளாச்சி தொகுதி எம்.பி. சண்முகசுந்தரம், ஈஸ்வரன் எம்எல்ஏ, கோவை மாநகராட்சி மேயர் கல்பனா ஆனந்தகுமார், துணை மேயர் வெற்றிச்செல்வன், மாநகராட்சி கமிஷனர் பிரதாப், மாவட்ட வருவாய் அலுவலர் லீலா அலெக்ஸ் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று மாலை, பொள்ளாச்சி செல்கிறார். ஆச்சிப்பட்டியில் நடக்கும் திமுக பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசுகிறார்.அதே மேடையில் மாற்றுக்கட்சியினர் 50 ஆயிரம் பேர், முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைகின்றனர். அவர்களுக்கு சால்வை அணிவித்து வரவேற்கிறார்.

மேலும் படிக்க