September 6, 2020
தண்டோரா குழு
கோவையில் முழு ஊரடங்கு தளர்வான போதும் வணிக வளாகங்கள் வெறிச்சோடி காணப்படுகின்றன.
கடந்த இரண்டு மாதங்களாக ஞாயிற்றுக்கிழமைகளில் கொரணா தடுப்பு நடவடிக்கையின் ஒரு பகுதியாக முழுமையான ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டு வந்த இந்த சூழ்நிலையில் ஞாயிற்றுக் கிழமைகளிலும் வழக்கம்போல் கடைகள் செயல்படும் என ஊரடங்குக்கு முற்றுப்புள்ளி வைத்தது தமிழக அரசு.
இந்த சூழ்நிலையில் முடங்கிக் கிடந்த கோவை வணிக வளாகங்கள், கடைகள், சாலைகள் ஞாயிற்றுக் கிழமையான இன்றும் திறக்கப்பட்டன. ஆனால் வழக்கமாக பரபரப்பாக காணப்படும் செட்டி வீதி, ஒப்பணக்கார வீதி, பெரியகடைவீதி, காந்திபுரம் குறுக்குசாலை, 100 அடி சாலை உள்ளிட்ட அனைத்து சாலைகளிலும் 60 சதவீத கடைகள் மட்டுமே திறக்கப்பட்டன. அவ்வாறு திறக்கப்பட்ட கடைகளிலும் பெருமளவிலான கூட்டத்தைக் காணமுடியவில்லை.கையில் காசு இல்லாததால் பொருளாதார நெருக்கடியில் சிக்கித்தவிக்கும் கோவை பொதுமக்கள் வணிக வளாகங்கள் மற்றும் கடை வீதிகளுக்கு வரவில்லை. இதனால் கடைகள் வெறிச்சோடி காணப்படுகின்றன.
காலை முதல் துணிக்கடைகள் தங்க நகைக்கடைகள் இயந்திர உதிரி பாகங்களின் மின்னணு சார்ந்த எலக்ட்ரானிக் விற்பனை கடைகள் உள்ளிட்டவை திறக்கப்பட்டு இருந்தபோதும் கடந்த 6 மாதத்துக்கு முன்பு காணப்பட்ட கூட்டத்தினரை காண முடியவில்லை. அவ்வப்போது வரும் ஒருசில வாடிக்கையாளர்களும் பெருமளவிலான பொருட்களை வாங்க ஆர்வம் காட்டவில்லை என வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.
கோவையில் நாளுக்கு நாள் பெருகி வரும்கொரணாதொற்று காரணமாகவும் பொது மக்கள் வெளியே வர அச்சப்படுகின்றனர்.