• Download mobile app
20 Apr 2024, SaturdayEdition - 2992
FLASH NEWS
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

உலக அளவில் தேர்வு செய்யப்பட்ட சிறந்த நான்கு பெண்மணிகளில் கோவையைச் சேர்ந்த  நானம்மாள் பாட்டி

August 21, 2019 தண்டோரா குழு

ஜெர்மன் நாடு உலக அளவில் தேர்வு செய்யப்பட்ட சிறந்த நான்கு பெண்மணிகளில் கோவையைச் சேர்ந்த யோகா புகழ் பத்மஸ்ரீ நானம்மாள் பாட்டி இடம் பெற்றுள்ளார்.

கோவை கணபதியைச் சேர்ந்தவர் நானம்மாள். எட்டு வயதாக இருக்கும் போது தன்னுடைய தந்தையிடமிருந்து யோகா கற்றுக்கொண்ட நானம்மாள் தற்போது 100 வயதை நெருங்கியும் தன் யோகா பயணத்தைத் தொடர்ந்து வருகிறார். இதுவரைக்கும் சுமார் பத்து லட்சம் பேருக்கு யோகாசனம் கற்றுக்கொடுத்துள்ளார்.

இதற்கிடையில், அண்மையில் ஜெர்மன் நாடு உலக அளவில் நான்கு சிறந்த பெண்மணிகளை தேர்வு செய்தது,.இதில் நானம்மாள் பாட்டி இந்தியாவிலிருந்து இடம் பெற்ற ஒரே பெண்மணி என்ற சிறப்பை பெற்றுள்ளதோடு உலக அளவில் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

விரைவில் 100 வயதை நெருங்கும் இவருக்கும் இந்த சிறப்பு கிடைத்ததை அடுத்து அவரது குடும்பத்தை சேர்ந்த 100 க்கும் மேற்பட்ட குடும்ப உறுப்பினர்கள் அவரை சந்தித்து வாழ்த்து பெற்றனர்.

இதற்கான விழா கோவை அத்திப்பாளையம் பகுதியில் உள்ள ஆனந்தம் யோகா மற்றும் இயற்கை மருத்துவ மையத்தில் நடைபெற்றது. இதில் ஜெர்மனி நாட்டை சேர்ந்தவர்களும் கலந்து கொண்டு நானம்மாள் பாட்டியுடன் கலந்துரையாடினர்.

இது குறித்து அவரது ஐந்தாவது மகனும் யோகா ஆசிரியருமான எல்லுசாமி செய்தியாளர்களிடம் பேசுகையில்,

600-க்கும் மேற்பட்ட யோகா ஆசிரியர்களை உருவாக்கியுள்ள எனது அம்மாவின் வழியில் நானும் யோகாவுடன் இந்த இயற்கை மருத்துவ மையத்தை நடத்தி வருவதாகவும் இதில் உள்நாட்டினர் மட்டுமல்லாது வெளிநாட்டினரும் இந்த இயற்கை மையத்தில் வந்து செல்வதாக தெரிவித்தார். மருத்துவ துறையில் பல்வேறு நவீன தொழில் நுட்பங்கள் வந்தாலும் நமது நாட்டின் பாரம்பரியம் மாறாமல் இந்த மையத்தில் யோகாவுடன் இயற்கை சிகிச்சைகள் குறிப்பாக, எண்ணெய், நீராவி, மூலிகை,குளியல்கள் என பல்வேறு குளியல் சிகிச்சைகளும் மேலும் இந்த மையத்தில் அனைத்து விதமான உணவு சார்ந்த மூலிகைகள் குறித்து பயிற்சிகள் வழங்கப்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.

தொடர்ந்து யோகா பாட்டியின் இன்னொரு மகனான பாலகிருஷ்ணன் பேசுகையில், எங்களது குடும்பத்தை சேர்ந்த பெரும்பாலான அனைவரும் இப்போது உலகின் பல்வேறு நாடுகளில் யோகா கற்பித்து வருவதாக தெரிவித்த அவர்,விரைவில் அவரது 100 வது பிறந்தநாளை பெரிய விழாவாக கொண்டாட உள்ளதாக மகிழ்ச்சி தெரிவித்தார்.

தொடர்ந்து பத்மஸ்ரீ நானம்மாள் பேசுகையில்,

யோகா பயில ஆரம்பித்ததிலிருந்து இப்போது வரை நாள் தவறாமல் யோகாசனம் செய்துவருவதாகவும், ஒருநாள்கூட உடல்நிலை சரி இல்லையென்று தாம் மருத்துவமனை பக்கமே தான் சென்றதில்லை என கூறும் அவர், வலுவான உடலையும், மனதையும் யோகாவால் பெற்றிருப்பதாக கூறினார்.தம்முடைய அன்றாட வேலைகளை அவர் கூறுகையில்,
காலையில் வேப்பங்குச்சியில் பல்துலக்கி பின்னர் ராகி, கம்பு, மக்காச்சோளம், பாசிப்பயிறு, கோதுமை, தானியங்கள் என்று ஏதாவதொன்றை கூழாக பருகி,பின்னர் மதிய உணவாக சாதம், காய்கறிகள், கீரை, அவற்றோடு கொஞ்சம் மோர் சேர்த்துக்கொள்வதாக தெரிவித்தார்.

வீடுமுழுக்க விருதுகளை வாங்கிக் குவித்து வைத்திருக்கும் நானம்மாள் ஏற்கெனவே இந்திய அரசின் உயரிய விருதான பத்மஸ்ரீ விருதை பெற்றிருந்தாலும் மீண்டும் ஒரு முறை ஜெர்மன் நாட்டின் சார்பாக சிறந்த பெண்மணியாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது கோவைக்கு மட்டுமல்ல நமது நாட்டுக்கே பெருமையாகவே கருத முடிகிறது.

மேலும் படிக்க