February 2, 2026
தண்டோரா குழு
மாணவிகள் தொழில் மற்றும் ஆராய்ச்சி சார்ந்த திறன்களை மேம்படுத்தும் நோக்கில் கிருஷ்ணம்மாள் மகளிர் கல்லூரியில் புதிய மையம் தொடங்கப்பட்டுள்ளது.
கோவை அவினாசி சாலையில் பிஎஸ்ஜிஆர் கிருஷ்ணம்மாள் மகளிர் கல்லூரி செயல்பட்டு வருகிறது.இக்கல்லூரியில் மாணவிகளிடையே தனித்திறன்களை வளர்க்கும் விதமாக பல்வேறு பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகின்றன.
இதனிடையே மாணவிகளை உலகத் தர திறன்களுடன் உருவாக்கும் விதமாகவும், தொழில்துறை மற்றும் ஆராய்ச்சி சார்ந்த பயிற்சிகளை வழங்கும் விதமாகவும் ‘Centre of Excellence for Future Skills – Diamond Beneath Your Feet’ என்ற மையம் தொடங்கப்பட்டுள்ளது.
இந்த மையத்தின் தொடக்க விழா இன்று கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது. இதில்,கல்லூரி செயலாளர் யசோதா தேவி,
கல்லூரி முதல்வர் ஆரதி,IFSPD Europe தலைவர் சங்கீத் வர்கீஸ்,இந்த மையத்தின் (IIMSTC) தலைவர் ஸ்ரீதர் சரஸ்வதி, TNASDC இயக்குநர் சஞ்சு ஆப்ரகாம்,GFTI நிறுவனர் சிஏ நாராயணன் நம்பியார் ஆகியோர் கலந்து கொண்டு மையத்தின் செயல்பாடுகளைத் தொடங்கி வைத்தனர்.
வரவேற்புரை நிகழ்த்திய KCW செயலாளர் டாக்டர் நா.யசோதா தேவி,பெண்கள் முன்னேற்றத்திற்கான தரமான கல்வியை வழங்குவது கல்லூரியின் அடிப்படை நோக்கம் எனக் குறிப்பிட்டார். புதிய திறனாய்வு மையம் மாணவிகளின் கல்வியையும் உலகளாவிய வாய்ப்புகளையும் இணைக்கும் முக்கிய மேடையாக இருக்கும் என்றார்.
இதனைத் தொடர்ந்து, IFSPD Europe தலைவர் சங்கீத் வர்கீஸ் மாணவிகள் மத்தியில் பேசியதாவது:-
உங்கள் கல்லூரிக்கு என்று ஒரு விதிமுறைகள் உள்ளதுபோன்றே ஒவ்வொரு நிறுவனத்திற்கும் விதிமுறைக்கான புத்தகம் இருக்கும். அதேபோல், ஒரு நிறுவனத்திற்கு நேரம் தவறாமை என்பதும் முக்கியமானதாக உள்ளது.
நீங்கள் எவ்வளவு அறிவுத்திறன் உள்ளவராக இருந்தாலும், முதல் ஆண்டை முடித்துவிட்டு, நேரடியாக 3ம் ஆண்டிற்கு சென்று படிக்க முடியாது.இதேபோலவே ஒரு நிறுவனத்தின் பணியாளர்களும் பணியமர்த்தப்படுகின்றனர்.
நீங்கள் வருங்காலத்தில் உழைப்பதற்கு இங்கேயே பயிற்சியை எடுத்துக் கொண்டிருக்கிறீர்கள்.எதிர்கால தலைமுறை மாணவிகளுக்கு தலைமைத் திறன் மற்றும் உலகளாவிய பார்வை என்பது மிகவும் அவசியம். இன்று தொடங்கப்பட்ட திறனாய்வு மையத்தை முழுமையாகப் பயன்படுத்திக் கொள்ளுங்கள்.அது உங்களை உலகின் முன்னணி நிறுவனங்களுக்குக் கொண்டு சேர்க்கும்.
இவ்வாறு அவர் பேசினார்.
நிகழ்ச்சியின் முக்கிய அம்சமாக, KCW மற்றும் பல்வேறு அமைப்புகளுக்கிடையில் ஒப்பந்தங்கள் (MoUs) பரிமாறிக் கொள்ளப்பட்டன.இதன் மூலம் சர்வதேச இன்டர்ன்ஷிப்,கூட்டு ஆராய்ச்சி, மாணவர் மற்றும் பேராசிரியர் பரிமாற்றத் திட்டங்கள், உலகளாவிய அங்கீகாரம் பெற்ற சான்றிதழ் வாய்ப்புகள் ஆகியவை உருவாகும்.
இந்த மையத்தின் மூலம் மாணவிகள் மேம்பட்ட ஆய்வகங்கள், புதுநுட்பப் பயிற்சிகள், சர்வதேச இன்டர்ன்ஷிப் மற்றும் தொழில் வழிகாட்டுதல் ஆகியவற்றைப் பெறுவர். “Diamond Beneath Your Feet” என்ற முக்கிய முயற்சியின் மூலம் ஒவ்வொரு மாணவியிடமும் உள்ள மறைந்துள்ள திறமைகளைக் கண்டறிந்து, உலகளாவிய மேன்மையாக மாற்றுவது KCW-வின் குறிக்கோளாகும்.
இந்த நிகழ்ச்சியில் கல்லூரி பேராசிரியர்கள் மற்றும் மாணவிகள் கலந்து கொண்டனர்.