• Download mobile app
05 Sep 2025, FridayEdition - 3495
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

உரிய நேரத்தில் பதிலளிப்பேன் – சசிகலா

February 8, 2017 தண்டோரா குழு

“மக்கள் மத்தியில் எழுப்பப்படும் குழப்பங்களுக்கு உரிய நேரத்தில் பதிலளிப்பேன். அ.தி.மு.க.வின் விரோதிகள் துரோகத்தின் வடிவில் வருகிறார்கள். கழகம் அதற்கு அஞ்சாது” என்று அ.தி.மு.க. பொதுச்செயலாளார் வி.கே. சசிகலா கூறியுள்ளார்.

சென்னையில் உள்ள அ.தி.மு.க. தலைமைக் கழகத்தில் அ.தி.மு.க. சட்டப்பேரவை உறுப்பினர்கள் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.

அதில் அ.தி.மு.க. பொதுச்செயலாளார் வி.கே சசிகலா பேசியதாவது;

“ஜெயலலிதாவின் மறைவுக்குப் பின்னர் அ.தி.மு.க.வில் கலகம் வராதா என்று பலர் காத்திருந்தார்கள். தி.மு.க.வின் சதித் திட்டத்திற்குப் பலர் துணை போனார்கள்.

ஜெயலலிதாவை அழிக்கத் துடித்த தி.மு.க.வுடனான ஓ. பன்னீர்செல்வத்தின் செயல்கள், ஜெயலலிதா எதற்காகப் போராடினாரோ, கடைக்கோடித் தொண்டர்கள் எதற்காகப் போராடினார்களோ அவற்றை நிறைவேற்றும் விதத்தில் அமைந்திடவில்லை.

ஜெயலலிதா இல்லாத இந்த நேரத்தில், அவர் வகுத்த பாதையில் இருந்து விலகிட முடியாது. ஜெயலலிதாவின் கனவுதான் நம் பார்வை. அவரது வழியில் தான் நம் பாதை. அவர் காட்டிய பாதையில் தான் நமது பயணம். இதைத் தாண்டி யார் நடந்தாலும், நடித்தாலும் அந்த நடையை, நடிப்பை, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் கண்டுபிடித்துவிடும். ஜெயலலிதாவின் கனவுகள் நிறைவேற்றப்பட வேண்டும்.

சட்டப்பேரவையில் ஓ. பன்னீர்செல்வத்தை ஆதரித்து தி.மு.க.வின் துரைமுருகன் பேசும் போது, அதற்கு எந்தவித கருத்தையும் தெரிவிக்காமல் அப்போதே ஓ. பன்னீர்செல்வம் மவுனம் காத்த செயல், அவர் தி.மு.க.வில் ஐக்கியம் ஆகிவிட்டதைக் காட்டுகிறது.

ஓ. பன்னீர்செல்வத்தின் கருத்துகளுக்கு உரிய முக்கியத்துவத்தை வழங்கினேன். சட்டப் பேரவையில் தி.மு.க. மற்றும் அவருக்கு இடையேயான வார்த்தைப் பரிமாற்றங்களில் இருந்த உள் அர்த்தம் எனக்குப் புரியாமல் இல்லை. அது, அடுத்த கட்டத்தை நோக்கிச் செல்லாமல் தடுப்பதுதான் பொதுச் செயலாளராக உள்ள என்னுடைய கடமை.

துரோகங்கள் ஒரு போதும் வென்றது கிடையாது. அதுவும் அஇஅதிமு கழகத்தை என்றும் வெல்லவே முடியாது. இத்தனை காலம் ஜெயலலிதாவிற்காக வாழ்ந்தேன். இனி, அவரது கனவுகளுக்காக வாழ்வேன். அதே முடிவைத்தான் நீங்களும் எடுத்துள்ளீர்கள். இந்த லட்சியப் பயணத்தில் என்னோடு பயணிக்கும் ஜெயலலிதாவின் பிள்ளைகளாகிய உங்கள் அனைவருக்கும் என் வாழ்த்துகள்.

மக்கள் மத்தியில் எழுப்பப்படும் குழப்பங்களை உரிய நேரத்தில் நான் தீர்த்து வைப்பேன். அ.தி.மு.க.வின் விரோதிகள் துரோகத்தின் வடிவில் வருகிறார்கள். கழகம் அதற்கு அஞ்சாது”

இவ்வாறு சசிகலா பேசினார்.

மேலும் படிக்க