September 7, 2020
தண்டோரா குழு
திருப்பூர் கே.வி.ஆர் நகர் பகுதியை சேர்ந்தவர்கள் கார்த்திக்கேயன், ஆனந்தி தம்பதியினர்.இவர்களது மூத்த மகன் நவீன் குமார்.வயது 15.பெருந்தொழுவு அரசுப்பள்ளியில் 10 ஆம் வகுப்பு முடித்து 11 ஆம் வகுப்பு செல்ல உள்ளான்.
இந்த நிலையில் நவீன் குமாருக்கு கடந்த சில மாதங்களுக்கு முன்பு மார்பு பகுதியில் ஏற்பட்ட வலி காரணமாக மருத்துவமனையில் பரிசோதனை செய்த போது அவருக்கு இருதய வால்வுகள் இரண்டுமே செயலிழந்ததை கண்ட பெற்றோர் பதறினர்.தங்களின் மகனின் இந்நிலையை கண்டு தினந்தோறும் கண்ணீர் வடித்தனர்.பல்வேறு மருத்துவமனைகளும் சிகிச்சையளித்தும் பலனில்லை என கைவிரித்து விட்ட நிலையில் புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனைக்கு மாணவனை கொண்டு சென்றனர். அங்கு கொரோனோ பரவல் அதிகமிருந்த காரணத்தால் சிகிச்சைக்கு சேர்க்க மறுத்துள்ளனர். இதனால் பதறிய பெற்றோர் கோவை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.அங்கும் மருந்து ,மாத்திரைகளை கொடுத்தனுப்பி தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்ல அறிவுறுத்தியுள்ளனர். தனியார் மருத்துவமனைக்கு மாணவனை கொண்டு சென்று தங்களிடம் 5 லட்ச ரூபாய் இன்சூரன்ஸ் கார்டு உள்ளதை கூறியுள்ளனர். அதற்கு அந்த தனியார் மருத்துவமனை முன்பணமாக ரூ.1 லட்சம் செலுத்த கூறியுள்ளனர். தங்களிடம் போதுமான பணம் இல்லாததை கூறியும் சிகிச்சையளிக்க மறுத்துள்ளனர்.
இந்த நிலையில் மாணவனின் கை,கால்கள் மற்றும் முகம் வீங்கி உயிருக்கு ஆபத்தான நிலையில் உள்ளான்.தங்களிடம் போதுமான நிதி வசதி இல்லாமலும்,மாணவனின் உயிரை காக்க போராடி வரும் பெற்றோரின் நிலை கண்டு அப்பகுதி மக்கள் கண்ணீர் வடிக்கின்றனர்.நல் உள்ளம் படைத்தோர் மாணவனின் உயிரை காக்க உதவிகள் செய்தால் மாணவனின் உயிரை காப்பாற்றி பெற்றோரின் கண்ணீரை துடைக்க இயலும்.
பெற்றோரின் செல்போன் எண் ; 95858 68735