September 21, 2017
தண்டோரா குழு
கோவை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் மூலமாக உதவித்தொகை பெறும் படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் தங்களது வங்கிக்கணக்குடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் ஹரிஹரன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இதுக்குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்ததாவது,
“கோவை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் மூலமாக படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பற்றோர் உதவித்தொகைத் திட்டத்தின் கீழ் மாதம்தோறும் வழங்கப்பட்டு வருகின்றது.
இத்திட்டத்தின்கீழ் பயன்பெறும் பயனாளிகள் தங்களது வங்கிக்கணக்குடன் ஆதார் எண்ணை இணைக்கவேண்டுமென தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
அதன்பொருட்டு உதவி தொகை பயன்பெறுவோர் தங்களது ஆதார் அட்டை நகல், சாதிச்சான்று நகல், குடும்ப அட்டை நகல், வங்கி சேமிப்பு கணக்கு புத்தக நகல் மற்றும் வேலைவாய்ப்பு அலுவலக பதிவு அடையாள அட்டையின் நகல் ஆகியவற்றுடன் கோவை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்திற்கு நேரிலோ அல்லது தபால் மூலமாகவோ அனுப்பி வைத்து ஆதார் எண்ணை பதிவு செய்து தொடர்ந்து பயன்பெற வேண்டும்,” என்றார்.