• Download mobile app
28 Mar 2024, ThursdayEdition - 2969
FLASH NEWS
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

உக்கடம் பெரியகுளத்தில் படகு சவாரி, செல்பி ஸ்பாட், மிதவை பாலம் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறப்பு !

February 26, 2021 தண்டோரா குழு

கோவை மாநகராட்சியில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் புனரமைக்கப்பட்டு நவீனப்படுத்தப்பட்ட உக்கம் பெரியகுளத்தின் ஒரு பகுதி,செல்வசிந்தாமணி குளம், வாலாங்குளத்தின் ஒரு பகுதி, புனரமைக்கப்பட்டு வரும் குமாரசாமி மற்றும் செல்வம்பதி குளத்தின் ஒரு பகுதி ஆகியவற்றை மாநகராட்சி கமிஷனர் குமாரவேல் பாண்டியன் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக திறந்து வைத்தார்.

கோவை மாநகராட்சி உக்கடம் பெரியகுளம் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் ரூ.62.17 கோடி மதிப்பீட்டில் புனரமைத்து மேம்படுத்தப்பட்டுள்ளது. பெரிய குளத்தின் கரையின் மீது நடைபயிற்சி பாதை, மிதிவண்டி பாதை,இருக்கைகள், நிழற்குடைகள் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் திறந்தவெளி அரங்கம், விளையாட்டுத் திடல், உணவுக்கூடங்கள், படகுத்துறை, மிதவை உணவகம், குளத்திற்கு வரும் கழிவுநீரை சுத்தம் செய்ய கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் என பல்வேறு சிறப்பு அம்சங்கள் உள்ளது.

செல்வசிந்தாமணி குளம் ரூ.31.47 கோடி மதிப்பீட்டிலும், வாலாங்குளம் குறுக்கே உள்ள சாலை பகுதி ரூ.24.31 கோடி மதிப்பீட்டில் புனரமைத்து மேம்படுத்தப்பட்டுள்ளது.
வாலாங்குளத்தின் கரையானது ரூ.67.86 கோடி மதிப்பீட்டில் புனரமைத்து மேம்படுத்தப்பட்டுள்ளது. செல்வம்பதி மற்றும் குமாரசாமி குளங்கள் ரூ.31.25 கோடி மதிப்பீட்டில் புனரமைத்து மேம்படுத்தப்பட்டுள்ளது. இக்குளங்களில் பல்வேரு வசதிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இக்குளங்களை மக்களின் பயன்பாட்டிற்கு மாநகராட்சி கமிஷனர் இன்று திறந்து வைத்தார்.

பின்னர் மாநகராட்சி கமிஷனர் செய்தியாளர்களிடம் கூறியிருப்பதாவது:

கோவையில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் திறந்து வைக்கப்பட்டுள்ள 6 குளங்களில் பொதுமக்களுக்கு எந்த வகையான கட்டணமும் விதிக்கப்படவில்லை. விரைவில் வந்து செல்வதற்கான கால நேரம் நிர்ணயிக்கப்படும். சிகரெட் பிடிப்பது போன்ற வெறுக்கத்தக்க செயல்களில் ஈடுபடுவோர் மீது சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும்.

கோவை மாநகர, மாவட்ட மக்களுக்கு கிடைத்த வரப்பிரசாதமான இந்த திட்டத்தை, பொதுமக்கள் சிறப்பாக பயன்படுத்திக்கொண்டு, உடல் ஆரோக்கியத்துடன், குளத்தை சார்ந்துள்ள அனைத்து உயிரினங்களும் நல்ல முறையில் இருக்கவும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும். குளத்தில் பணிகள் மேற்கொண்ட நிறுவனத்திடமே குளத்தை தூய்மையாகவும், சுகாதாரமாகவும் வைத்துக்கொள்ள உத்தரவிடப்பட்டுள்ளது. நீர்வழிப்பாதைகளில் உள்ள ஆக்கிரமிப்பு குடியிருப்புகளை கண்டறிந்து கணக்கு எடுத்து, 50 சதவீததுக்கும் அதிகமான இடங்களில் ஆக்கிரமிப்புகளை அகற்றி அந்த பகுதியில் இருந்த மக்கள் மாற்று இடங்களில் குடியமர்த்தப்பட்டுள்ளனர்.

நீர்வழிப்பாதைகளில் உள்ள ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி தொடரும். ஆக்கிரமிப்பை முழுமையாக அகற்றி விட்டு, குளத்தை ஒன்றிணைக்கும் நீர்வழிப்பாதைகளை செம்மைப்படுத்தி செய்வதற்குமான திட்டமும் இந்த ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் உள்ளது. சென்னைக்கு அடுத்தப்படியாக கொரோனாவால் பாதிக்கப்பட்டது கோவை. முகக்கவசம் அணிவது, தனிமனித இடைவெளி ஆகியவையை பின்பற்ற பொதுமக்கள் துவங்கிவிட்டனர். கேரளாவில் தொற்று அதிகமாக இருப்பதால், அண்டை பகுதியான கோவைக்கும் பரவும் என்ற அச்சம் உள்ளது. தொற்று ஏற்பட்டவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் கண்டறியப்பட்டால் அந்த பகுதி கூடுதல் கவனத்துடன் கண்காணிக்கப்படுகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

இந்நிகழ்ச்சிகளில் முதன்மை செயல் அலுவலர் (ஸ்மார்ட் சிட்டி) ராஜகுமார், மாநகராட்சி துணை கமிஷனர் மதுராந்தகி, மாநகரகப் பொறியாளர் லட்சுமணன் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

மேலும் படிக்க