August 17, 2020
தண்டோரா குழு
இலங்கை போதை கடத்தல் மன்னன் அங்கொட லொக்கா மர்ம மரண வழக்கில் கைதான மூவருக்கு வரும் 31ம் தேதி வரை காவலை நீட்டித்து நீதிபதி உத்தரவிட்டார்.
இலங்கையை சேர்ந்த போதை கடத்தல் மன்னன் அங்கொட லொக்கா கோவையில் உயிரிழந்ததாக கூறப்படும் மர்ம வழக்கில் இலங்கையைச் சேர்ந்த அவரது காதலி என கூறப்படும் அமானி தாஞ்சி, போலி ஆவணங்களை தயாரிக்க உதவிய மதுரையை சேர்ந்த பெண் வழக்கறிஞர் சிவகாமி சுந்தரி மற்றும் அவரது நண்பரான திருப்பூரைச் சேர்ந்த தியானேஸ்வரன் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.இவர்களை 17-ம் தேதி வரை நீதிமன்ற காவலுக்கு உட்படுத்த நீதிபதி ஸ்ரீ குமார் உத்தரவிட்டு இருந்தார்.மேலும் இந்த வழக்கு சிபிசிஐடி போலீசார் வசம் ஒப்படைக்கப்பட்டது.
இந்நிலையில், சிபிசிஐடி போலீசா கைது செய்யப்பட்ட மூவரையும் 3 நாள் காவலில் எடுத்து விசாரணை மேற்கொண்டனர். இதனையடுத்து, நேற்று முன்தினம் இவர்களை கோவை தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.பின்னர் அமானி தாஞ்சி புழல் சிறையிலும் வழக்கறிஞர் சிவகாமி சுந்தரி கோவை மத்திய சிறையிலும் தியானேஸ்வரன் பொள்ளாச்சி சிறையிலும் அடைக்கப்பட்டனர்.
இதனிடையே,மூவருக்கும் நீதிமன்ற காவல் இன்றுடன் நிறைவடைந்த நிலையில், மூவரும் கோவை குற்றவியல் நீதிபதி ஸ்ரீகுமார் முன்பு காணொளி காட்சி ஆஜர்படுத்தபடுத்தபட்டனர். அப்போது, அவர்கள் மூவருக்கும் ஆகஸ்ட் 31ம் தேதி வரை காவலை நீட்டித்து நீதிபதி உத்தரவிட்டார்.