• Download mobile app
15 Nov 2025, SaturdayEdition - 3566
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

இந்திய ஜவுளித் துறைக்கு சிறப்பான வளர்ச்சியை உருவாக்க இந்திய சர்வதேச ஜவுளி எந்திர கண்காட்சி சங்கம் சார்பில் சிங்கப்பூரில் ‘வணிக மாலை’ நிகழ்ச்சி

November 15, 2025 தண்டோரா குழு

இந்திய ஜவுளித் துறைக்கு சிறப்பான எதிர்காலத்தை உருவாக்கவும் இந்திய ஜவுளி மற்றும் ஜவுளி பொறியியல் துறையில் வளர்ச்சிக்கான கருத்துக்களைப் பரிமாறிக் கொள்வதற்கும், அதில் உள்ள வாய்ப்புகளை ஆராய்வதற்கும் இந்திய சர்வதேச ஜவுளி எந்திர கண்காட்சி சங்கம் ‘‘ஜவுளித் துறையின் எதிர்காலத்தை உருவாக்குதல் – பாரம்பரியத்திலிருந்து உயர் தொழில்நுட்பம் வரை” என்ற தலைப்பில் சிங்கப்பூரில் சமீபத்தில் ஜவுளி அமைச்சக அதிகாரிகள், தூதரக அதிகாரிகள், தொழில்முனைவோர், தொழில்நுட்ப வல்லுனர்கள், தொழில் நிறுவனங்கள் மற்றும் பத்திரிக்கையாளர்கள் பங்கேற்ற ‘வணிக மாலை’ நிகழ்ச்சியை நடத்தியது.

இந்திய வணிக மாலை நிகழ்ச்சியில் இந்திய ஐடிஎம்இ சங்கத்தின் கவுரவ பொருளாளர் செந்தில் குமார்; ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் பாலியஸ்டர் பிரிவு தலைவர் ஹேமந்த் சர்மா; இந்திய அரசின் ஜவுளி அமைச்சகத்தின் கூடுதல் செயலாளர் ரோஹித் கன்சால்; சிங்கப்பூருக்கான இந்திய உயர் ஆணையர் டாக்டர் ஷில்பக் அம்புலே; பிரிட்டிஷ் ஜவுளி எந்திர சங்கத்தின் தலைமை நிர்வாக அதிகாரி ஜேசன் கென்ட்; இந்திய ஐடிஎம்இ சங்கத்தின் தலைவர் கேதன் சங்க்வி; இந்திய ஐடிஎம்இ சங்கத்தின் நிர்வாக இயக்குனர் சீமா ஸ்ரீவாஸ்தவா ஆகியோர் பங்கேற்றனர்.

இதில் சமீபத்தில் முடிவடைந்த தீபாவளி கொண்டாட்டங்கள் குறித்தும்,ஜவுளி, ஜவுளி தொழில்நுட்பம் மற்றும் எந்திரங்களுக்கான புதிய ஆதாரங்கள் மற்றும் வர்த்தக கூட்டணிகளை ஆராய்தல்,அது தொடர்பான கல்வி மற்றும் சாத்தியமான கூட்டாண்மைக்கான வலையமைப்பை உருவாக்குதல் என பல்வேறு விஷயங்கள் குறித்து இந்த மாலைப் பொழுதில் விவாதிக்கப்பட்டது.

இதில் அமெரிக்கா, இங்கிலாந்து, சீனா, சுவீடன்,இந்தோனேசியா, பங்களாதேஷ், இலங்கை, தைவான்,துருக்கி,ஜெர்மனி மற்றும் சிங்கப்பூர் ஆகிய நாடுகளைச் சேர்ந்த 183க்கும் மேற்பட்ட பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.பொருளாதார வளர்ச்சியை கூட்டாக அடையவும், அனைவரும் பரஸ்பர நன்மைகளைப் பெறவும், இந்தியாவில் வர்த்தக கூட்டாண்மைகள், தொழில்நுட்ப ஆதாரங்கள் மற்றும் உற்பத்தி கூட்டு முயற்சிகளை விரைவுபடுத்துவதற்காக சிங்கப்பூரில், சீன சர்வதேச ஜவுளி எந்திர கண்காட்சி-ஏசியா உடன் இணைந்து இந்திய சர்வதேச ஜவுளி எந்திர கண்காட்சி சங்கம் இந்த நிகழ்ச்சியை நடத்தியது.

இந்நிகழ்ச்சியில் மத்திய அரசின் ஜவுளி அமைச்சக கூடுதல் செயலாளர் ரோஹித் கன்சால் கூறுகையில்,

நெசவு மற்றும் பின்னல் எந்திரங்களை நிறுவுவதில் இந்தியா உலகின் சிறந்த மையங்களில் ஒன்றாக விளங்குகிறது. இது துணி மற்றும் ஆடை உற்பத்தி துறை முழுவதும் சிறப்பான மாற்றத்தை பிரதிபலிக்கிறது. மேலும் வரும் காலங்களில் ஜவுளி எந்திர முதலீட்டில் கூடுதல் கவனம் செலுத்தப்படும். இந்தியாவின் உள்நாட்டு சந்தை 1.4 பில்லியனுக்கும் அதிகமான நுகர்வோருடன் வேகமாக வளர்ந்து வருவதால், இந்தியா உலகின் மிகவும் முக்கியமான சந்தைகளில் ஒன்றாக உள்ளது. மேலும் முதலீடு மற்றும் ஒத்துழைப்புக்கான வாய்ப்புகளும் இங்கு ஏராளமாக உள்ளன என்று தெரிவித்தார்.

இதில் இந்திய ஜவுளி மற்றும் ஜவுளி பொறியியல் துறை பிரதிநிதிகள் குழு, பிரிட்டிஷ் ஜவுளி எந்திர சங்கம், தைவான் எந்திர தொழில் சங்கம், சர்வதேச ஜவுளி உற்பத்தியாளர்கள் கூட்டமைப்பு, துருக்கிய ஜவுளி எந்திரங்கள், துணைக்கருவிகள் தொழிலதிபர்கள் சங்கம், சிங்கப்பூர் வணிகர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு, ஸ்வீடன் ஜவுளி எந்திர சங்கம், சீன ஜவுளி எந்திர சங்கம் உள்ளிட்ட பல்வேறு சங்கங்களை சேர்ந்த பிரதிநிதிகளும் தங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொண்டார்கள்.

இந்திய – சிங்கப்பூர் வர்த்தக உறவுகளை முன்னெடுத்துச் செல்லும் சிங்கப்பூருக்கான இந்திய உயர் அதிகாரி ஷில்பக் அம்புலே கூறுகையில், சிங்கப்பூர் இந்தியாவின் 6வது பெரிய வர்த்தக கூட்டாளியாகவும், ஆசியாவில் மிகப்பெரிய வர்த்தக கூட்டாளியாகவும் உள்ளது. ஜவுளித் துறையில் இந்தியாவிற்கும் சிங்கப்பூருக்கும் இடையிலான உறவுகள் வலுவாக உள்ளது என்று தெரிவித்தார்.

ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் பாலியஸ்டர் பிரிவு தலைவர் ஹேமந்த் சர்மா பேசுகையில்,

இந்தியாவின் ஜவுளித் தொழில் நாட்டின் உற்பத்தி வளர்ச்சியில் முக்கிய பங்கு வகிக்கிறது. வேலைவாய்ப்புகள், ஏற்றுமதிகள் மற்றும் புதுமைகள் என ஏராளமாக இந்த துறையில் உள்ளது. மேலும் இது 2047-ம் ஆண்டுக்குள் 30 டிரில்லியன் டாலர் பொருளாதாரத்தை நோக்கிய இந்தியாவின் பயணத்திற்கு சிறப்பான பங்களிப்பை வழங்கும் என்றார்.

இந்திய சர்வதேச ஜவுளி எந்திர கண்காட்சி சங்கத்தின் தலைவர் சங்வி பேசுகையில்,

இந்த ஆண்டு தீபாவளி பண்டிகையின்போது மக்கள் கடந்த ஆண்டைக் காட்டிலும் 25 சதவீதம் கூடுதலாக அதாவது 47.22 பில்லியன் அமெரிக்க டாலர் செலவிட்டுள்ளனர்.ஜவுளி மற்றும் ஜவுளி பொறியியல் துறையானது அனைவருக்கும் வளர்ச்சி, நிலைத்தன்மை மற்றும் சிறப்பான எதிர்காலத்தை உள்ளடக்கி உள்ளது. அடுத்த ஆண்டு டிசம்பர் 4 முதல் 9 வரை இந்தியாவில் நடைபெறும் தென்கிழக்கு ஆசியாவின் மிகவும் பொருத்தமான ஜவுளி பொறியியல் வணிக நிகழ்ச்சியான ‘இந்தியா ஐடிஎம்இ 2026’ கிரேட்டர் நொய்டாவில் நடைபெற இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

மேலும் படிக்க