July 22, 2020
தண்டோரா குழு
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலக்குழு அலுவலகத்தையும் கட்சியின் மூத்த தலைவர்களையும் சமூக வலைத்தளங்களில் வலதுசாரியினர் தொடர் அவதூறுகளையும் வன்மத்தையும் பரப்பி வருகின்றனர். இதனை கண்டித்து கோவையில் பல்வேறு இடங்களில் இரண்டு கட்சியினர் இனைந்து கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கோவை மாவட்டக்குழு அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு மார்க்சிஸ்ட் கட்சியின் கோவை நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர்.நடராஜன் தலைமை தாங்கினார். இதில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட பொருளாளரும் முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினருமான கே.ஆறுமுகம். சிபிஎம் மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் என்.ஜெயபாலன், கே.அஜய்குமார், கிழக்கு நகர செயலாளர் என்.ஜாகீர் மற்றும் யு.கே.சிவஞானம் உள்ளிட்ட திரளானோர் பங்கேற்று கண்டன முழக்கங்களை எழுப்பினர்.
இதேபோல இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டக்குழு அலுவலகமான ஜீவா இல்லம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் சிபிஐ மாவட்ட செயலாளர் வி.எஸ்.சுந்தரம் தலைமை தாங்கினார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயலாளர் வி.ராமமூர்த்தி, விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாநகர் மாவட்ட செயலாளர் ஜோ.இலக்கியன் மற்றும் சிவசாமி உள்ளிட்ட திரளானோர் பங்கேற்று முழக்கங்களை எழுப்பினர்.
இதேபோன்று கோவை மாவட்டத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட மையங்களில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் மார்க்சிஸ்ட் கட்சியின் மாநிலக்குழு உறுப்பினர்கள் சி.பத்மநாபன், ஏ.ராதிகா மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர்கள் பங்கேற்று கண்டன உரையாற்றினர். பல்வேறு இடங்களில் திமுக, சிபிஎம், சிபிஐ, விசிக, திராவிடர் கழகம் உள்ளிட்ட அமைப்புகள் பங்கேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்