October 8, 2020
தண்டோரா குழு
சந்தோஷ் பி.ஜெயக்குமார் இயக்கத்தில் வெளியான படம் ‘இருட்டு அறையில் முரட்டுக் குத்து’. பல்வேறு விமர்சனங்களை கடந்தும் வசூல் படைத்தது. இதற்கிடையில், அதன் 2-ம் பாகமாக ‘இரண்டாம் குத்து’ என்ற படத்தை உருவாக்கியுள்ளார் சந்தோஷ் பி.ஜெயக்குமார். அதில் அவரே நாயகனாகவும் நடித்துள்ளார். இப்படத்தின் டீசர் வெளியாகி சர்ச்சையை கிளப்பியுள்ளது.
இரண்டாம் குத்து’ படத்தின் போஸ்டர்கள் மற்றும் டீஸருக்கு எதிர்ப்புத் தெரிவித்து பாரதிராஜா அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில் “சினிமா வியாபாரமும்தான்… ஆனால் வாழைப்பழத்தைக் குறிகளாகச் செய்து அதைக் கேவலமான பதிவோடு பொதுமக்களின் பார்வைக்குக் கொண்டு செல்லும் நிலைக்கு அவ்வியாபாரம் வந்து நிற்பது வேதனையடையச் செய்கிறது. இதற்காகவா இத்தனை ஜாம்பவான்கள் சேர்ந்து இந்த சினிமாவைக் கட்டமைத்தார்கள்?
சினிமா வாழ்க்கை முறையைச் சொல்லலாம். தப்பில்லை. இலைமறைகாய் மறையாகச் சரசங்கள் பேசலாம். ஆனால் இப்படிப் படுக்கையை எடுத்து நடுத் தெருவில் வைப்பது எந்தவிதத்தில் சரி என்பது?” என்று குறிப்பிட்டு இருந்தார் பாரதிராஜா.
இந்த அறிக்கைக்குப் பலரும் ஆதரவு தெரிவித்து வருகிறார்கள். இதனிடையே, பாரதிராஜாவின் அறிக்கைக்குப் பதிலடியாக ‘டிக் டிக் டிக்’ படத்தின் புகைப்படத்துடன் இயக்குநர் சந்தோஷ் பி.ஜெயக்குமார் தனது ட்விட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:
“அவர் மீது மிகுந்த மரியாதை வைத்துள்ளோம். 1981-ம் ஆண்டு ‘டிக் டிக் டிக்’ படத்தில் இதைப் பார்த்துக் கூசாத கண்ணு, இப்போது கூசிருச்சோ..?”
இவ்வாறு சந்தோஷ் பி.ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.