August 31, 2020
தண்டோரா குழு
தமிழக அரசின் அறிவிப்பை தொடர்ந்து கோவையில் கோவில்கள்,மசூதிகள், தேவாலயங்கள் மற்றும் வணிக வளாகங்கள் திறக்க ஆயத்தப் பணிகள் நடைபெற்று வருகிறது.
கோவை மாவட்டத்தில் நாளை முதல் தமிழக அரசு அறிவித்துள்ள தளர்வுகள் அடிப்படையில் கோவில்கள், மசூதிகள், தேவாலயங்கள் மற்றும் வணிக வளாகங்கள் அனைத்தும் திறக்கப்பட உள்ளது. இதற்கான அறிக்கையை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேற்று வெளியிட்டு இருந்தார்.இந்த சூழலில் அதற்கான ஆயத்த பணிகளில் பணியாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
புரூக் பாண்ட் சாலையில் அமைந்துள்ள வணிக வளாகம் (புரூக் பீல்ட்ஸ்)ல் 200க்கு மேற்பட்ட பிரபல நிறுவனங்களின் கடைகள் இயங்கி வருகின்றன. கடந்த ஆறு மாதமாக மூடியிருந்த நிலையில் நாளை முதல் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு அனுமதி அளித்து அறிவிப்பை வெளியிட்டுள்ளது.இதனை தொடர்ந்து, கடைகளை சுத்தம் செய்யும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். வணிக வளாகமானது செப்டம்பர் 4ம் தேதி திறக்கப்பட இருப்பதாகவும், காலை 12 மணி முதல் இரவு 8 மணி வரை மட்டுமே வணிக வளாகம் செயல்படும் எனவும் வணிக வளாகத்துக்கு வரக்கூடிய வாடிக்கையாளர்கள் அனைவரையும் உடல் வெப்ப நிலையை பரிசோதித்த பின்பு அனுமதிக்கப்பட உள்ளதாகவும் பிரத்யேக செயலி மூலமாக வரக்கூடிய நபர்களின் தகவல்களை சேகரிக்க திட்டமிட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.
மேலும், மாநகராட்சி நிர்வாகம் அறிவித்துள்ள (Pool Test) 10 நாட்களுக்கு ஒரு முறை பணியாளர்களுக்கு கொரோனா பரிசோதனை எடுக்க திட்டமிட்டுள்ளதாகவும் தெரிவித்தனர்.
இதேபோல, கோவையில் அவினாசி சாலையில் உள்ள பிரசித்தி பெற்ற தண்டு மாரியம்மன் திருக்கோவிலில் கிருமி நாசினிகள் கொண்டு சுத்தம் செய்யும் பணி மிக தீவிரமாக நடைபெற்று வருகிறது. பணியாளர்கள் கோவில் வளாகம், கோபுரம், சுற்றுச்சுவர் என அனைத்து பகுதிகளையும் சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளனர்
மேலும், காந்திபுரத்தில் உள்ள கிறிஸ்தவ தேவாலயம் சுத்தம் செய்யும் பணி நடைபெற்று வருகிறது. அதேபோல, ஒப்பணக்கார வீதியில் அமைந்துள்ள மசூதியில் சுத்தம் செய்யும் பணியானது நடைபெற்று வருகிறது. மசூதியில் தொழுகைக்கு வரும் பக்தர்கள் சமூக இடைவெளியுடன் செல்வதற்கு உள்ளிட்ட அனைத்து கட்டுப்பாடுகளையும் பின்பற்றுவதற்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.