March 21, 2018
தண்டோரா குழு
கேரள மாநிலம், கோழிக்கோடு கல்லூரியில் பயிலும் முஸ்லிம் மாணவிகள் பர்தா அணியாததைக் கண்டித்து பேராசிரியர் ஒருவர் ஆபாசமாக பேசியது பெரிய சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
கேரளாவில் ஃபரூக் கல்லூரியில் சமூக அறிவியல் ஆசிரியராக பணிபுரிந்து வருபவர் டி ஜவ்ஹர் முனாவிர். இவர் கோழிக்கோடு பகுதியில் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய ஒரு வீடியோ கடந்த 2 நாட்களாக சமூக வலைதளங்களில் வைரலாகி பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது.
அந்த வீடியோவில் முனாவிர்,
“நான் ஒரு கல்லூரியில் பேராசிரியராக இருக்கிறேன், இங்கு 80 %பெண்கள் படிக்கின்றனர், இவர்களிலும் இஸ்லாமிய மாணவிகளே அதிகம்.இவர்கள் தங்களது ஹிஜாப்களை சரியாக அணியாமல், மார்பகங்கள் தெரியும்படி ஆடைகளை அணிவதாக கூறியுள்ளார்.” இதுமட்டுமின்றி, பெண்களின் மார்பகங்கள் பற்றி தர்பூசணி பழத்துடன் ஒப்பிட்டு அவர் ஆபாசமாகவும் பேசியுள்ளார்.
இதையடுத்து, பேராசிரியர் முன்னாவிர் விமர்சித்த ஒலிநாடாவையும் மாணவிகள் பதிவு செய்து வைத்து அதை சமூக ஊடகங்களில் பரப்பினர்.மாணவிகளை தரக்குறைவாக விமர்சித்ததைக் கண்டித்து,நேற்றுமுதல் மாணவிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.சமூக ஊடகங்களிலும் இதுதொடர்பான கண்டனங்கள் வலுத்து வருகிறது.
முன்னாவிர் பேச்சுக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில் இந்திய மாணவர் அமைப்பைச் சேர்ந்த மாணவிகள் இன்று கையில் தர்பூசணிப்பழங்களை வைத்து போராட்டத்தில் ஈடுபட்டு, சாலையில் ஊர்வலமாக வந்தனர். கல்லூரி வாசலின் முன் தர்பூசணிப் பழத்தை உடைத்து அகில பாரதிய வித்யார்த்தி பரிசத் அமைப்பினரும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆனால், இதுவரை பேராசிரியர் மீது கல்லூரி நிர்வாகம் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதற்கிடையில், முனாவிருக்கு எதிராக தியா சானா என்ற மாணவி தனது மார்பில் தர்பூசணி பழத்தை வைத்துக்கொண்டு இருப்பது போன்ற புகைப்படத்தை முகநூலில் வெளியிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
புகைப்படத்துடன் கருத்து தெரிவித்துள்ள அவர், பெண்கள் தாங்கள் என்ன அணிய விரும்புகிறார்களோ அதை அணியும் உரிமை உள்ளது. எப்போது இந்த சமூகம் பெண்களை ஒரு காட்சிப் பொருளாக காட்டுவதை நிறுத்தும் என்று கேள்வி கேட்டுள்ளார்.
இந்நிலையில், இது தொடர்பாக விளக்கம் அளித்த ஃபரூக் கல்லூரியின் முதல்வர் முனாவிர் 3 மாதங்களுக்கு முன்பு பேசியதை இப்போது பிரச்னையாக்க வேண்டாம். அவரின் பேச்சில் ஒரு பகுதி மட்டும் சமூக வலைதளங்களில் பரப்பப்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.