September 27, 2020
தண்டோரா குழு
ஆன்லைனில் 1 டன் குறிமிளகு ஆர்டர் கொடுத்து நூதன முறையில் திருட்டில் ஈடுபட்ட 2 நபர்களை பெரியநாயக்கன்பாளையம் காவல்துறை கைது செய்தனர்.
தேனி மாவட்டம் தேவாரம் பகுதியைச் சேர்ந்தவர் வசந்தகுமார்.மிளகு வியாபாரம் செய்துவருகிறார்.வசந்தகுமாரிடம் ஆன்லைன் மூலம் தொடர்பு கொண்ட சிலர்,தாங்கள் கோவை காரமடையைச் சேர்ந்த வியாபாரிகள் என்றும் தங்களுக்கு 1 டன் மிளகு தேவைப்படுவதாக கூறி ஆர்டர் கொடுத்துள்ளனர்.அதற்கான தொகையினை டெலிவரியின் போது கொடுப்பதாக உறுதியளித்துள்ளனர்.இதனை நம்பி வசந்தகுமார் ஜீப் மூலம் தலா 50 கிலோ மூட்டைகளாக 1 டன் மிளகினை 20 மூட்டைகளில் பேக் செய்து சிவக்குமார் என்ற ஓட்டுனர் மூலம் கோவைக்கு அனுப்பியுள்ளர்.
கோவை வந்த சிவக்குமார் ஆர்டர் கொடுத்த முகவரியை கண்டுபிடிக்க முடியாமல் தேடியுள்ளார். அப்போது வாகனம் ஓட்டி வந்த களைப்பில் பெரியநாயக்கன்பாளையத்தை அடுத்த வீரபாண்டி பகுதியில் வாகனத்தை நிறுத்தி விட்டு சற்று தொலைவில் இருந்த கடையின் முன்பாக படுத்து உறங்கியுள்ளார். இதனை நோட்டமிட்ட திருட்டு கும்பல் தங்களது சரக்கு ஆட்டோவை கொண்டு வந்து இந்த வாகனத்தின் அருகில் நிறுத்தி அதிலிருந்த 20 குருமிளகு மூட்டைகளையும் மாற்றி அங்கிருந்து தப்பியுள்ளனர்.தூங்கி எழுந்த ஓடுனர் சிவக்குமார் வாகனத்திற்கு சென்று பார்த்த போது மிளகு மூட்டைகள் திருடப்பட்டிருப்பது கண்டு அதிர்ச்சியடைந்தார்.
இதையடுத்து பெரியநாயக்கன்பாளையம் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். புகாரை தொடர்ந்து தனிப்படை அமைக்கப்பட்டு திருட்டு கும்பலை தேடி வந்தனர். இந்நிலையில் திருட்டு நடந்த இடத்தில் நடத்திய விசாரணை கிடைத்த வாகனத்தின் அடையாளத்தை வைத்து அருகில் உள்ள உள்ள கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்தனர். திருட்டிற்கு பயன்படுத்திய வாகனத்தின் எண் தெளிவாக பதிவாகியிருந்தது. வண்டியின் எண்ணை வைத்து கோவை போத்தனூரைச் சேர்ந்த அப்துல் நாசர் (28) மற்றும் சதாம் உசேன்(27) ஆகிய இருவரை போலீசார் கைது செய்தனர்.
தொடர்ந்து அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் இதே போன்று பல இடங்களில் ஆன்லைன் மூலம் பாதாம், முந்திரி, ஏலக்காய், குருமிளகு உள்ளிட்ட விலை அதிகமான நறுமணப் பொருட்களை போலியான முகவரி கொடுத்து ஆர்டர் செய்து அதனை நூதன முறையில் திருடி வந்ததை ஒப்புக்கொண்டனர்.
இதையடுத்து அவர்களிடம் இருந்து ரூ.3 லட்சம் மதிப்புள்ள 1 டன் மிளகு மற்றும் திருட்டிற்கு பயன்படுத்திய வானகத்தையும் போலீசார் பறிமுதல் செய்தனர். தொடர்ந்து கைது செய்யப்பட்ட இருவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.