August 23, 2020
தண்டோரா குழு
ஆகஸ்ட் மாதத்தின் 4வது வார முழு ஊரடங்கு காரணமாக கோவையில் முக்கிய வீதிகள் வெறிச்சோடின.
கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளின் தொடர்ச்சியாக தமிழகம் முழுவதும் ஜூலை மாதத்தின் அனைத்து ஞாயிற்றுக்கிழமைகளிலும் முழு ஊரடங்கு கடைப்பிடிக்கப்பட்டது. இந்த நிலையில் ஆகஸ்ட் மாதத்தின் அனைத்து ஞாயிற்றுக்கிழமைகளிலும் தளர்வுகளற்ற ஊரடங்கிற்கு தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.அதன்படி ஆகஸ்ட் மாதத்தின் 4வது வார முழு ஊரடங்கு நள்ளிரவு 12 மணி முதல் தமிழகம் முழுவதும் அமலுக்கு வந்துள்ளது.
இந்த நிலையில் கோவையில் பொதுமக்கள் முழுமையான ஒத்துழைப்பை வழங்கி வருகின்றனர்.கோவை மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளில் பொது மக்கள் நடமாட்டத்தை கட்டுப்படுத்த சுமார் 2500 காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.தேவையின்றி வாகனங்களில் வெளியே வரும் நபர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு அவர்களது வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும் என மாவட்ட நிர்வாகம் நிலையில், மாநகர எல்லை பகுதிகளில் உள்ள 14 சோதனைச் சாவடிகள் உட்பட கூடுதலாக 40 சோதனைச் சாவடிகள் அமைக்கப்பட்டு,மொத்தம் 54 சோதனைச் சாவடிகளில் காவல்துறையினர் வாகன தணிக்கையில் ஈடுபடுத்தப் பட்டுள்ளனர்.மாநகர எல்லைகளில் உள்ள சோதனைச் சாவடிகளில் தீவிர விசாரணைக்குப் பிறகு அத்தியாவசிய பொருட்களை ஏற்றி வரும் வாகனங்கள் தவிர்த்து மற்ற சரக்கு வாகனங்கள் திருப்பி அனுப்பப்படுகின்றன.
மாநகரில் சுமார் 1500 காவலர்கள்,
புறநகர் பகுதியில் 1000 காவலர்கள் என மொத்தம் 2500 காவலர்கள் வாகன தணிக்கை மற்றும் பாதுக்காப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். பொது மக்கள் நடமாட்டத்தை கண்காணிக்க மாநகரில் 8 இடங்களில் கண்காணிப்பு கோபுரங்கள் அமைக்கப்பட்டுள்ளன. திருச்சி சாலை மற்றும் அவினாசி சாலைகளில் முக்கிய இடங்கள் ஒருவழிப் பாதையாக மாற்றப்பட்டு கண்காணிப்பு கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்பட்டு வருகின்றன. அதேபோல மாநகர எல்லைக்குள் உள்ள மேம்பாலங்கள் தடுப்புகள் கொண்டு அடைக்கப்பட்டுள்ளன.பால் விற்பனை மற்றும் மருந்தகங்கள் தவிர்த்து, இதர கடைகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளதால் மாநகரின் முக்கிய சாலைகளான காந்திபுரம் கிராஸ்கட் சாலை,டாக்டர் நஞ்சப்பா சாலை, அவினாசி சாலை, திருச்சி சாலை, ஒப்பணக்கார வீதி உள்ளிட்ட இடங்கள் ஆள் நடமாட்டம் இன்றி வெறிச்சோடி காணப்படுகின்றன.மாவட்டத்தை பொருத்தவரை அனைத்து பகுதிகளிலும் உள்ள மளிகைக் கடைகள்,காய்கறி கடைகள், இறைச்சிக் கடைகள்,அரசு மதுபானக் கடைகள் முழுமையாக மூடப்பட்டுள்ளன.
மேலும் மாவட்டத்தில் உள்ள அனைத்து பெட்ரோல் பங்குகளும் மூடப்பட்டுள்ள நிலையில் ஆம்புலன்ஸ், மருத்துவப் பணியாளர்களின் வாகனங்கள் மற்றும் அரசு வாகனங்களுக்கு மட்டும் பெட்ரோல் டீசல் நிரப்ப அறிவுறுத்தப்பட்டுள்ளது. பால்,மருந்துகள் போன்ற அத்தியாவசிய தேவைகளுக்காக பொது இடங்களுக்கு வருவோர் கட்டாயமாக முகக்கவசம் அணிய அறிவுறுத்தப்பட்டுள்ளது.