July 9, 2020
தண்டோரா குழு
அரசு மருத்துவமனையில் செல்போன் தொடர் திருட்டில் ஈடுபட்ட நபரை பொதுமக்கள்
பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர்.
கோவை அரசு மருத்துவமனையில் புற நோயாளிகள் ஏராளமானோர் தினமும் வந்து செல்கின்றனர்.இதில் உள் நோயாளிகள் ஏராளமானோர் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில் மருத்துவமனையில் செல்போன் திருடு போவதாக புகார்கள் எழுந்தன.
இந்நிலையில் இன்று பாலக்காடு பகுதியை சேர்ந்த ரமேஷ் என்பவரை கைது செய்து அவரிடம் இருந்து ஏழு செல்போன்களை பறிமுதல் செய்தனர். போலீசாரின் விசாரனையில் இவர் கடந்த இரண்டு வருடங்களாக அடுமனை ஒன்றில் பணியாற்றி வந்ததாக தெரிவித்துள்ளார். ஊரடங்கு காரணமாக சொந்த ஊருக்கு செல்ல முடியாமல் இருந்தவர் அரசு மருத்துவமனை வளாகம் அருகில் தங்கி அம்மா உணவகத்தில் இலவச உணவு உட்கொண்டு வந்துள்ளார்.
இந்நிலையில் இன்று அரசு மருத்துவமனையில் செல்போன் திருட்டில் ஈடுபட்டபோது அவரை கையும் களவுமாக பிடித்த பொதுமக்கள் மருத்துவமனை ஊழியர்களிடம் இது குறித்து தெரிவித்தனர். அவர்கள் அளித்த புகாரின் பேரில் அங்கு வந்த போலீசார் அவரை காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டனர். இதில் ரமேஷ் மருத்துவமனையில் அனுமதிக்கபட்ட நோயாளிகள் மற்றும் அவர்களுடன் இருக்கும் உதவியாளர்களிடம் இருந்து செல்போன்களை திருடுவதை வழக்கமாக கொண்டு இருப்பது தெரிய வந்தது.மேலும் அவரிடமிருந்து ஏழு செல்போன்களை பறிமுதல் செய்த போலீசார் அவரிடம் மேலும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.