September 26, 2020
தண்டோரா குழு
பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியத்தின் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது.
பிரபல பின்னணி பாடகர் எஸ்.பி பாலசுப்பிரமணியம் கொரோனாவால்
பாதிக்கப்பட்டு சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் கடந்த ஆகஸ்ட் மாதம் 5ம் தேதி அனுமதிக்கப்பட்டார். இவருக்காக பலரும் பிரார்த்தனையில் ஈடுபட்டனர்.
இதற்கிடையில்,கடந்த மாதத்தின் இறுதியில் அவரின் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்ட நிலையில் தொடர்ந்து எக்மோ மற்றும் செயற்கை சுவாசக் கருவியின் உதவியுடன் சிகிச்சை பெற்று வந்தார். மேலும்,கொரோனா தொற்றில் இருந்து மீண்டதாகவும், பிஸியோதெரபி சிகிச்சை பெற்றுவருவதாகவும் கூறப்பட்டது.
ஆனால்,நேற்று முன் தினம் மாலை எஸ்.பி.பியின் உடல்நிலை மிகவும் ஆபத்தான கட்டத்தில் இருப்பதாகவும், அதிகபட்ச உயிர் காக்கும் கருவிகளுடன் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் மருத்துவமனை சார்பில் அறிக்கை வெளியிடப்பட்டது. இந்நிலையில்,சிகிச்சை பலனின்றி எஸ்.பி.பாலசுப்ரமணியம் நேற்று உயிரிழந்தார். அவருக்கு திரைத்துறையினர், அரசியல் பிரமுகர்கள் என பலரும் இரங்கல் தெரிவித்தனர்.
இதையடுத்து,எஸ்.பி.பாலசுப்ரமணியம் உடல், திருவள்ளூர் மாவட்டம் செங்குன்றம் தாமரைப்பாக்கத்தில் உள்ள அவரது பண்ணை வீட்டில் அஞ்சலிக்காக வைப்பட்டது. பின்னர் அவரது மகன் எஸ் பி.சரண் இறுதி சடங்குகள் செய்து முடித்த பின் 72 குண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன் எஸ்.பி.பியின் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது.24 போலீசார் வீதம் 3 சுழற்சி அடிப்படையில் வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர். அவரது ரசிகர்கள் கண்ணீர் மல்க சென்றனர்.