August 25, 2026
தண்டோரா குழு
கோவை அடுத்த ஏஜி புதூர் பகுதியில், ‘ஓடை வனம்’ அமைப்பின் மூலம் பள்ளி, கல்லூரி மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் தங்களது விடுமுறை நாட்களில் தூய்மைப் பணிகள், மரம் வளர்ப்பு உள்ளிட்ட சமூகப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். இவர்களின் தொடர் முயற்சியால் அப்பகுதி பசுமை நிறைந்த சோலைவனமாக மாறி வருகிறது.
கோவை விமான நிலையம் அருகில் இருப்பதால்,அந்தப் பகுதியைச் சேர்ந்த மாணவர்கள் விமானங்கள் பறப்பதையும், தரையிறங்குவதையும் ஆர்வத்துடன் பார்த்து வந்துள்ளனர்.ஒரு நாள் தாங்களும் விமானத்தில் பயணிக்க வேண்டும் என்ற கனவும் அவர்களிடம் நீண்ட நாட்களாக இருந்து வந்துள்ளது.இதனை அறிந்த கோவை பட்டணம் பகுதியைச் சேர்ந்த ‘Cars 327’ நிறுவனத்தின் நிறுவனர் விஷ்ணு வேணுகோபால், மாணவர்களின் கனவை நனவாக்க முன்வந்துள்ளார்.
இதன்படி,ஏஜி புதூர் பகுதியைச் சேர்ந்த 36 அரசுப் பள்ளி மாணவ, மாணவிகளை வரும் 26-ஆம் தேதி கோவையிலிருந்து விமானம் மூலம் சென்னைக்கு அழைத்துச் சென்று, அங்குள்ள முக்கிய இடங்களைச் சுற்றிக் காண்பித்துவிட்டு,அதே நாளில் மாலை விமானம் மூலம் மீண்டும் கோவைக்கு அழைத்து வர சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
மாணவர்களின் விமானப் பயணம் மற்றும் சுற்றுலாவுக்கான அனைத்து செலவுகளையும் ‘Cars 327’ நிறுவனம் ஏற்றுக்கொண்டுள்ளது.இந்தத் தகவலை அறிந்த மாணவ, மாணவிகள் மிகுந்த மகிழ்ச்சியடைந்ததுடன், தங்களது நீண்ட நாள் கனவை நனவாக்கிய விஷ்ணு வேணுகோபாலுக்கு நன்றியும் தெரிவித்தனர்.இதற்கான விமான டிக்கெட்டுகள் வழங்கும் நிகழ்வு ஏஜி புதூர் ‘ஓடை வனம்’ பகுதியில் நடைபெற்றது. இதில் பசுமை ஏஜி புதூர் தங்கவேல், ‘மரம்’ சண்முகம் மற்றும் ஓடை வனம் அமைப்பின் நிர்வாகிகள் விமான டிக்கெட்டுகளைப் பெற்றுக்கொண்டனர்.
இந்த ஏற்பாடுகளை ‘Cars 327’ நிறுவனத்தின் சார்பில் விஷ்ணு வேணுகோபால் மற்றும் மோகன் வேணுகோபால் ஆகியோர் செய்திருந்தனர்.
அரசுப் பள்ளி மாணவர்களின் கனவை உணர்ந்து, அதைச் செயல்படுத்திய இளைஞரின் இந்த முயற்சிக்கு ஏஜி புதூர்–குரும்பபாளையம் பகுதி பொதுமக்கள் பாராட்டு தெரிவித்துள்ளனர்.