October 7, 2020
தண்டோரா குழு
2021 சட்டமன்றத் தேர்தலுக்கான அஇஅதிமுகவின் முதலமைச்சர் வேட்பாளராக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி. கே.பழனிசாமி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளார்.
2021 சட்டமன்றத் தேர்தலுக்கான அஇஅதிமுகவின் முதலமைச்சர் வேட்பாளர் யார் என்ற குழப்பம் கடந்த சில நாட்களாக நீடித்து வந்தது. இதையடுத்து,அதிமுக முதல்வர் வேட்பாளர் குறித்த அறிவிப்பு இன்று (அக்டோபர் 07) வெளியிடப்படும் என அதிமுகவின் துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமி
அறிவித்திருந்தார்.
இந்நிலையில்,அதிமுகவின் முதல்வர் வேட்பாளர் யார் என்பது குறித்த அறிவிப்பை வெளியிட ராயப்பேட்டையில் உள்ள அஇஅதிமுக தலைமை அலுவலகத்தில் தமிழக முதல்வரும், அதிமுகவின் இணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி பழனிசாமி,மற்றும் அதிமுக ஒருங்கிணைப்பாளரும், தமிழக துணை முதல்வருமான ஓ.பன்னீர்செல்வம் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர்.
அப்போது எடப்பாடி பழனிசாமி 11 பேர் கொண்ட அதிமுக வழிகாட்டு குழுவை அறிவித்தார். இதைத்தொடர்ந்து அதிமுக முதல்வர் வேட்பாளர் எடப்பாடிபழனிசாமி தான் என துணை முதல்வர் ஓ.பி.எஸ்.அறிவித்தார்.