September 8, 2020
தண்டோரா குழு
அடியாட்களை கொண்டு மிரட்டுவதாக பஜாஜ் நிறுவனத்தை கடன் பெற்றவர்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
கோவை பந்தய சாலையில் உள்ள பஜாஜ் பைனான்ஸ் நிறுவனத்தை அங்கு கடன் பெற்ற வாடிக்கையாளர்கள் 50கும் மேற்பட்டோர் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.
இது குறித்து கடன் பெற்றவர்கள் கூறுகையில்,
கொரோனா தொற்று காரணமாக ஊரடங்கு அமல்படுத்தபட்ட நிலையில் கடந்த 6 மாதங்களாக வாழ்வாதாரம் இன்றி அவதபட்டு வரும் நிலையில் பணத்தை உடனடியாக திருப்பி செலுத்த வலியுறுத்தி அடியாட்களை கொண்டு மிரட்டுவதாகவும் வீட்டிற்கு வரும் நிதி நிறுவனத்தை சாராத ஆட்கள் பெண்களிடம் தகாத வார்த்தைகள் பேசுவதாகவும் குற்றம் சாட்டினர்.
இது குறித்து இடையர்பாளையம் பகுதியை சேர்ந்த பிரபாகரன் என்பவர் கூறுகையில்,
கடந்த 2018ம் ஆண்டு புதிய ஆட்டோ வாங்க இந்த நிறுவனத்திடம் இருந்து கடன் பெற்று மாதம் 5620 ரூபாய் பணம் முறையாக செலுத்தி வந்த நிலையில் பிப்ரவரி மாதத்திற்கு பின் ஊரடங்கு காரணமாக பணம் செலுத்த முடியாத சூழல் ஏற்பட்டதாக தெரிவித்தார்.கொரோனா தொற்று பரவலை கட்டுபடுத்தும் நோக்கில் அரசு அறிவிப்பின்படி ஆட்டோக்கள்,கால் டாக்சி போன்றவவை இயக்கபடாத காரணமாக பெரும்பாலானவர்கள் தினசரி வருமானதிற்கு அவதிபட்டு வருவதாகவும் இந்த சூழலில் பணத்தை உடனடியாக செலுத்த வற்புறுத்தல் செய்வது சரியல்ல என தெரிவித்தனர்.நிதி நிலைமை சீரடையும் வரையில் தங்களுக்கு குறைந்தபட்சம் 6 மாத காலம் அவகாசம் வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டனர்.முற்றுகை குறித்த தகவல் தகவல் அறிந்த பந்தய சாலை போலீசார் நிர்வாகத்துடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் இங்குள்ள அதிகாரிகள் பேச்சுவார்த்தைக்கு ஒத்துழைக்க மறுப்பதாக குற்றம்சாட்டினர்.இதனால் அங்கு பரபரப்பான சூழல் நிலவி வருகிறது.
கோவை மாவட்டத்தில் நிதி நிறுவனங்களில் கடன் பெற்ற பலர் இவ்வாறு பாதிக்கப்பட்டுள்ளதாகவும் மாவட்ட நிர்வாகமும் மாநில அரசும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்தனர்.