April 28, 2017 
tamilsamayam.com
                                இந்தியா முழுவதும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள பாகுபலி-2 திரைப்படம், இந்தியா முழுவதும் இன்று சுமார் 6000 திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. பாகுபலி -2 படத்தின் தமிழ் பதிப்பு, தமிழ்நாடு முழுவதும் உள்ள 650 திரையரங்குகளில் திரையிட திட்டமிடப்பட்டிருந்தது.
இந்நிலையில் பாகுபலி-2 படத்திற்கு காலை முதல் இரவு வரை, இன்று மட்டும் 6 காட்சிகள் திரையிட தமிழகத்தில் உள்ள திரையரங்குகள் ஏற்பாடு செய்திருந்தன. ஆனால் பாகுபலி-2 படத்தின் தமிழ் பதிப்பில், கியூப் தொழில்நுட்பம் மூலம் காட்சிகள் பதிவேற்றப்படாததால் திரையரங்குகளில் காலை காட்சி திரையிடப்படவில்லை. பட வினியோகஸ்தர் மற்றும் தயாரிப்பாளருக்கு இடையே ஏற்பட்ட பிரச்சனை காரணமாகவே, கியூப் தொழில்நுட்பத்தில் படம் பதிவேற்றம் செய்யப்படவில்லை என கூறப்படுகிறது.
இதனால் அதிகாலை காட்சிக்கு வந்திருந்த ரசிகர்கள் கடும் ஏமாற்றம் அடைந்தனர். ஒருவேளை தமிழக திரையரங்குகளுக்கான பிரிண்டுகள், உடனடியாக கியூப் தொழில்நுட்பத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டால் மட்டுமே பாகுபலி-2 படத்தின் மதிய காட்சியை தமிழகத்தில் திரையிட முடியும்.
அதே சமயத்தில் சென்னையில் உள்ள சில திரையரங்குகளில் பாகுபலி-2 படத்தின் தெலுங்கு பதிப்பு வெளியாகி ஓடி வருகிறது.