January 9, 2019
தண்டோரா குழு
தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகர் சிவகார்த்திகேயன். இவர் தாயாரிப்பாளர் அவதாரம் எடுத்து அதில் வெற்றியும் கண்டுள்ளார்.
இவரது தயாரிப்பில் அருண்ராஜா காமராஜா இயக்கத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் சமீபத்தில் வெளியான கனா படம் மாபெரும் வெற்றிபெற்றது. பெண்கள் கிரிக்கெட் மற்றும் விவசாயத்தை மையமாக எடுக்கப்பட்ட இப்படம் ரசிகர்கள் மத்தியிலும் நல்ல வரவேற்பை பெற்றது.
இதற்கிடையில், நார்வேயில் ஆண்டு தோறும் தமிழ்த்திரைப்பட திருவிழா நடத்தப்பட்டு விருதுகள் வழங்குவது வழக்கம். அந்த வகையில் இந்த ஆண்டிற்கான விருது பட்டியல் வெளியாகியுள்ளது.
அதில், சிறந்த நடிகராக, 96 படத்தில் நடித்த விஜய் சேதுபதி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இதேபோல, சிறந்த நடிகையாக த்ரிஷா தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். சிறந்த திரைப்படமாக பரியேறும் பெருமாளும், சிறந்த இயக்குனராக ‘மேற்கு தொடர்ச்சி மலை’ படத்தை எடுத்த லெனின் பாரதியும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். ‘கனா’ படத்தை தயாரித்த நடிகர் சிவகார்த்திகேயன், சிறந்த தயாரிப்பாளராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.’
பரியேறும் பெருமாள்’, ‘வடசென்னை’ படங்களுக்கு இசையமைத்த சந்தோஷ் நாராயணன் சிறந்த இசையமைப்பாளராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். ஏப்ரல் மாதம், நார்வே தலைநகர் ஓஸ்லோவில் நடக்கும் விழாவில் விருதுகள் வழங்கப்படவுள்ளன. முதல் படத்திற்கு சிறந்த தயாரிப்பாளர் விருது அறிவிக்கப்பட்டுள்ளது சிவகார்த்திகேயன் ரசிகர்களுக்கு பெரும் மகிழ்ச்சியை ஏற்படுதியுள்ளது.