January 20, 2017
tamilsamayam.com
மெரினா கடற்கரையில் ஜல்லிக்கட்டு போராட்டத்தில் கலந்து கொண்டுள்ள பெண்களுக்காக நான்கு கேரவன்களை அனுப்பி வைத்துள்ளார் நடிகர் ராகவா லாரன்ஸ்.
சென்னை மெரினா கடற்கரையில் ஜல்லிக்கட்டு ஆதரவாக நடைபெற்று வரும் போராட்டத்திற்கு நேரில் சென்று ஆதரவு தெரிவித்த நடிகர் ராகவா லாரன்ஸ்,தமிழகம் முழுவதும் போராட்டத்தில் ஈடுபடுபவர்களுக்காக உணவளிக்க ஒரு கோடி ரூபாய் அளிப்பதாக கூறி பலரையும் நெகிழச் செய்தார்.
மேலும் அப்போதே குறிப்பிட்ட அளவு உணவுப் பொட்டலங்களை வாங்கி அங்கேயே விநியோகித்தார்.இதனால் சமூக வலைத்தளத்தங்களில் ராகவா லாரன்சின் சேவையை,தமிழ் உணர்வை இளைஞர்கள் பாராட்டி வந்தனர்.
இந்நிலையில் சென்னை மெரினா கடற்கரையில் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு உதவும் விதமாக,இன்று காலை கழிவறைகள் உள்ள 5 கேரவன்களை நடிகர் ராகவா லாரன்ஸ் நடித்து வரும் சிவலிங்கா படத்தின் தயாரிப்பாளர் கொண்டு வந்தார்.
பொதுவாக வெளியூர் படப்பிடிப்புத் தளங்களில் நடிகர்,நடிகைகள் தங்குவதற்காக இந்த கேரவன் வேன்கள் பயன்படுத்தப்படும்.ஆனால் போராட்ட களத்தில் இயற்கை உபாதைகளை கழிக்க பெண்கள் அதிகம் சிரமப்படுகிறார்கள் என்பதை அறிந்ததும்,உடனடியாக சிவலிங்கா படப்பிடிப்புத் தளத்தில் இருந்த 5 கேரவன்களையும் ராகவா லாரன்ஸ் அனுப்பி வைத்ததாக தயாரிப்பாளர் தெரிவித்தார்.