December 3, 2016 தண்டோரா குழு
ரூபாய் நோட்டு மாற்றும் நடவடிக்கைகளை மேற்கொள்ள கூட்டுறவு வங்கிகளுக்கு தடை விதிக்கப்பட்டிருப்பதால் கிராம மக்கள் பெரும் சிரமத்துக்குள்ளாகி வருகின்றனர். இதனைக் களைய, மத்திய அரசு என்னென்ன நடவடிக்கை எடுத்துள்ளது என உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
மத்திய அரசின் பழைய ரூ 500,1000 வாபஸ் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து உச்ச நீதிமன்றத்திலும், பல்வேறு மாநிலங்களின் உயர் நீதிமன்றங்களிலும் எண்ணற்ற மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.
அதில் ரூபாய் மாற்றும் நடவடிக்கைகளிலிருந்து கூட்டுறவு வங்கிக்கு விலக்கு அளிக்கப்பட்டது குறித்த மனு மீதான விசாரணை, உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி.எஸ். தாக்குர், நீதிபதி டி.ஒய். சந்திரசூட் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
விசாரணையின்போது, அரசு சார்பில் ஆஜரான மத்திய அரசின் தலைமை வழக்குரைஞர் முகுல் ரோத்தகி, “நம் நாட்டில் கிராமப்புறங்களில் இருக்கும் கூட்டுறவு வங்கிகளில் போதிய அளவு உள்கட்டமைப்பு மற்றும் தொழில்நுட்ப வசதிகள் இல்லை. மேலும், கள்ள நோட்டுகளைக் கண்டறியும் நிபுணத்துவமும் கூட்டுறவு வங்கிகளுக்கு கிடையாது.
இதனைக் கருத்தில் கொண்டே, ரூபாய் மாற்றும் நடவடிக்கைகளிலிருந்து கூட்டுறவு வங்கிக்கு விலக்கு அளிக்கப்பட்டது” என வாதிட்டார்.
அதை கூட்டுறவு வங்கிகள் சார்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞர் ப. சிதம்பரம் கடும் எதிர்ப்பு தெரிவித்தார். “அரசின் இந்த நடவடிக்கையால் கிராமப் பொருளாதாரமே முடங்கியிருக்கிறது” என்று அவர் கூறினார் .
இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள் கூறியதாவது:
ரூபாய் நோட்டு மாற்றும் நடவடிக்கைகளை மேற்கொள்ள கூட்டுறவு வங்கிகளுக்கு தடை விதிக்கப்பட்டிருப்பதால் கிராம மக்கள் பெரும் சிரமத்துக்குள்ளாகியுள்ளனர். அதைக் களைய, மத்திய அரசு என்னென்ன நடவடிக்கைகளை எடுத்துள்ளது? இது குறித்து மத்திய அரசு பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டனர்.
வழக்கின் அடுத்தகட்ட விசாரணை வரும் 5-ஆம் தேதி நடைபெறும் என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர்.