April 22, 2021
தண்டோரா குழு
கோவை மாநகராட்சியில் இனி வரும் காலங்களில் குடிநீர் கட்டணம் தொடர்பாக குறுந்தகவல் மூலம் தகவல் தெரிவிக்கப்படும். அதை காண்பித்து கட்டணத்தை செலுத்தலாம் என மாநகராட்சி கமிஷனர் குமாரவேல் பாண்டியன் கூறியுள்ளார்.
இதுகுறித்து மாநகராட்சி கமிஷனர் கூறியிருப்பதாவது:
கோவை மாநகராட்சியில் இரு மாதங்களுக்கு ஒருமுறை குடிநீர் பயன்பாட்டு அளவு கணக்கெடுக்கப்பட்டு, பயனாளிகளிடம் உள்ள குடிநீர் மானி அட்டையில் பயன்படுத்தப்பட்ட அளவும், செலுத்த வேண்டிய தொகையும் பதியப்படுகிறது. குடிநீர் இணைப்பு பயனாளிகள் தங்கள் குடிநீர்மானி அட்டையினை மாநகராட்சியின் வரிவசூலிப்பு மையத்தில் காண்பித்து குடிநீர் கட்டணம் செலுத்தி வருகின்றனர்.
தற்போதைய கொரோனா நோய் தொற்று சூழ்நிலையில் குடிநீர்மானி அளவெடுப்பவர், பயனாளிகள் மற்றும் வரிவசூல் மைய பணியாளர்கள் ஆகியோருடன் நேரடி தொடர்பு ஏற்படுவதை தவிர்க்கும் பொருட்டு மாறுதல் செய்யப்படுகிறது.
இனி வரும் காலங்களில் குடிநீர்மானி கணக்கு எடுக்கப்பட்டபின் பயனாளியின் கைபேசிக்கு குடிநீர் பயன்படுத்தப்பட்ட அளவு, செலுத்த வேண்டிய தொகை மற்றும் செலுத்த வேண்டிய கடைசி தேதி ஆகிய விபரங்கள் குறுந்தகவல் மூலம் அனுப்பப்படும். பயனாளிகள் தங்கள் கைபேசிக்கு வந்த குறுந்தகவலை மாநகராட்சி வரிவசூல் மையத்தில் காண்பித்து தொகையை செலுத்தலாம்.
இவ்வாறு குமாரவேல் பாண்டியன் கூறியுள்ளார்.