October 12, 2020
தண்டோரா குழு
கோவையில் ஒரே யோகா பயிற்சி மையத்தை சேர்ந்த ஏழு வயதான சிறுவன்,சிறுமி ஆகிய இருவர் யோகாவில் இரு வேறு புதிய உலக சாதனைகளை நிகழ்த்தி அசத்தியுள்ளனர்.
கோவை சேரன் மாநகர் பகுதியை சேர்ந்தவர் தயநிதா. நரேந்திரன், ரேணுகா தேவி தம்பதியரின் மகளான இவர் சந்திரகாந்தா மெட்ரிக் பள்ளியில் இரண்டாம் வகுப்பு பயின்று வருகிறார்.யோகா கற்பதில் ஆர்வம் கொண்ட இவர் அதே பகுதியில் உள்ள ஸ்ரீ யுனிக் யோகாலயம் பயிற்சி மையத்தில் யோகா கலா பாரதி விருது பெற்ற விஜயலஷ்மி என்ற யோகா ஆசிரியையிடம் ஆறு மாதமாக யோகா பயிற்சி செய்து வந்தார்.இதே போல பாரதி நகர் பகுதியை சேர்ந்த இரண்டாம் வகுப்பு பயிலும் அஷ்வந்த.சுரேஷ் மற்றும் சித்ரகலா ஆகியோரின் மகனான இவர் கேந்திரிய வித்யாலயா பள்ளியில் இரண்டாம் வகுப்பு படித்து வருகிறார். இந்நிலையில் தயநிதா சக்ராசனம், நடராஜாசனம்,ஹனுமாசனம்,என பல்வேறு ஐம்பது ஆசனங்களை ஏழு நிமிடத்தில் செய்து முடித்தும், அஷ்வந்த் தொடர்ந்து அரை மணி நேரம் பூமாசனம் செய்தும் நோபல் உலக சாதனை புத்தகத்தில் இடம் பெற்றுள்ளனர்.உலக சாதனை புரிந்த இருவருக்கும் நோபல் உலக சாதனை சான்றிதழை டாக்டர் கலையரசன் வழங்கினார்.
இந்நிலையில் இதற்கான துவக்க விழாவில் கிராமிய புதல்வன் அகாடமிக்கு வருகை தந்த கோவை வடக்கு சட்டமன்ற தொகுதி உறுப்பினர் பி.ஆர்.ஜி.அருண்குமார் சாதனை புரிந்த இருவருக்கும் வாழ்த்து தெரிவித்தார். இதனை தொடர்ந்த சாதனை புரிந்த அஷ்வந்த்,தயநிதா ஆகியோர் செய்தியாளர்களிடம் பேசுகையில்,பெற்றோர்கள் மற்றும் யோகா ஆசிரியையுடன் ஊக்கத்துடன் மேலும் பல சாதனைகளை யோகாவில் செய்ய உள்ளதாக தெரிவித்தனர்.ஏழு வயதில் ஆறு மாதங்கள் மட்டுமே யோகா பயிற்சி பெற்று உலக சாதனை புரிந்த இருவரையும் பல்வேறு தரப்பினரும் பாராட்டி வருகின்றனர்.