October 8, 2020
தண்டோரா குழு
கோவை லோட்டஸ் கண் மருத்துவமனை மற்றும் ரோட்டரி கோயமுத்தூர் சிட்டி இணைந்து உலகக் கண் பார்வை தினத்தை இன்று கோவை ஆர்.எஸ்.புரத்திலுள்ள லோட்டஸ் கண் மருத்துவமனையில் கொண்டாடியது.விழாவில் உச்ச நீதிமன்றத்தின் வழக்குறைஞரான உதயா மேனன், ரோட்டரி கோயமுத்தூர் சிட்டியின் தலைவர் அத்தீஸ் குமார் ஸ்வைன், லலித் கலாஷெத்ரா செயலர் விக்னேஷ் ராஜ் ஆகியோர் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டனர்.உலக கண் பார்வை தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வை ஏற்படுத்தும் பொருட்டு இந்நிகழ்ச்சியில் சுமார் 600 பள்ளி மாணவ மாணவியருக்கு ஜூம் விழித்திரை மூலம் ஓவியப் போட்டி நடைபெற்றது.
விழாவில் லோட்டஸ் கண் மருத்துவமனையின் முதன்மை நிர்வாக அதிகாரி டாக்டர் கே.எஸ் இராமலிங்கம் தனது தலைமை உரையில்,
உலகெங்கும்; பல கோடி மக்கள் பார்வையின்மையால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதில் 100 கோடி மக்களுக்கான பார்வையிழப்பு தடுக்கப்பட்டிருக்கலாம் அல்லது சிகிச்சை மூலம் சரி செய்யப்பட்டிருக்கலாம். இந்தியாவிலும் பல மக்கள் சரியான கண் பார்வை இன்றித் தவிக்கிறனர். இது பற்றிய விழிப்புணர்வை நம் பகுதியில் ஏற்படுத்துவதே இந்த நிகழ்ச்சியின் நோக்கமாகும் என்றார்.
உச்ச நீதிமன்றத்தின் வழக்குறைஞரான உதயா மேனன் பேசுகையில்,
கண் பார்வை அற்றோர் கண்ணியத்துடன் வாழ்வதற்காக 1970-களிலிருந்து நமது அரசாங்கம் பல்வேறு சட்டங்களை இயற்றி வந்துள்ளது. கண் பார்வை அற்றவர்களுக்கு பல்வேறு கல்வி நிறுவனங்களிலும் அரசாங்க வேலைகளிலும் தனி ஒதுக்கீடு ஏற்படுத்தப்பட்டுள்ளது. இந்த சட்டங்களின் நோக்கம் நிறைவேறுவதற்கு மக்களிடையே அதிக விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். காணொலி மூலம் பாடங்கள் நடத்தப்படும் இன்றைய சூழ்நிலையில், மாணவ மாணவியர் தங்கள் கண் பார்வையை பரிசோதனை செய்து கொள்வது மிகவும் அவசியம் என்றார்.
ரோட்டரி கோயமுத்தூர் சிட்டியின் தலைவர் அத்தீஸ் குமார் ஸ்வைன் பேசுகையில்,
கண் பார்வை குறைபாடு உள்ளவர்களக்கு உதவுவதற்காக தமது ரோட்டரி சங்கம் லோட்டஸ் கண் மருத்துவமனை உடன் இணைந்து சமூகத் திட்டங்களை செயல்படுத்த உள்ளது. கொரானா பாதிப்பு குறைந்தவுடன்; கண் பரிசோதனை முகாம்களையும் நாங்கள் நடத்த உள்ளோம் என்றார்.
லோட்டஸ் கண் மருத்துவமனை நிர்வாக இயக்குநர் சங்கீதா சுந்தரமூர்த்தி பேசுகையில்,
இந்தியாவிலுள்ள பலரின் கண் பார்வை குறைபாடுகளை போக்குவதற்காக லோட்டஸ் கண் மருத்துவமனை சமுதாய நோக்குடன் செயல்படும் என்றார்.லோட்டஸ் கண் மருத்துவமனையின் துணைத் தலைவர் தமிழ்செல்வன் போட்டிக்கு ஒத்துழைப்பு தந்த கேம்லின் நிறுவனத்திற்கும் மற்றும் உதவி புரிந்த அனைவருக்கும் நன்றியைத் தெரிவித்தார்.