October 6, 2020
தண்டோரா குழு
தேவேந்திர குல வேளாளர்களின் நீண்ட நாள் கோரிக்கைகளை மத்திய மாநில அரசுகள் விரைவில் நிறைவேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோவையில் புதிய தமிழகம் கட்சியின் நிறுவன தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி தெரிவித்துள்ளார்.
தேவேந்திர குல வேளாளர் அரசாணை மற்றும் பட்டியல் வெளியேற்ற கோரிக்கையை வலியுறுத்தி,தமிழகம் முழுவதும் பத்தாயிரம் இடங்களில் உண்ணாவிரதம் போராட்டம் நடத்த போவதாக புதிய தமிழகம் கட்சியினர் அறிவித்திருந்தனர்.அனைத்து மாவட்ட தலைநகரங்கள்,புறநகர், பேரூராட்சி மற்றும் கிராமங்களில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை உண்ணாவிரதம் நடைபெற இருந்த நிலையில்,கொரோனா தொற்று நோய் பரவல் தடுப்பு ஊரடங்கு தொடர்வதால் உண்ணாவிரதப் போராட்டத்துக்கு காவல்துறையினர் மறுத்துள்ளனர்.
இந்நிலையில் கோவையில் பல்வேறு இடங்களில் தடையை மீறி உண்ணாவிரத போராட்டம் நடைபெற்று வருகிறது.இதில் கோவை உப்பிலிபாளையம் பகுதியில் கோவை மாநகர் மாவட்ட தலைமை ஒருங்கிணைப்பாளர் சங்கர் குரு,தலைமையில் நடைபெற்ற உண்ணாவிரத போராட்டத்தில் புதிய தமிழகம் கட்சியின் நிறுவன தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி கலந்து கொண்டார்.
அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில்,
“பள்ளர், குடும்பர்,பண்ணாடி, காலாடி, உள்ளிட்ட பிரிவுகளை ஒருங்கிணைத்து தேவேந்திர குல வேளாளர் என்று அரசு ஆணை பிறப்பிக்க வேண்டும் என தொடர்ந்து வலியுறுத்தி வருவதாகவும்,அதன் படி தேவேந்திர குல வேளாளர்களின் பல்வேறு கோரிக்கைளை மத்திய மாநில அரசுகள் உடனடியாக கவனம் செலுத்தி நிறைவேற்றி தர வேண்டும் என அவர் தெரிவித்தார்.இதில் தேவேந்திர குல வேளாளர் சங்க தலைவர் பிரபு குமார் பட்டக்காரர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.