October 5, 2020
தண்டோரா குழு
உ.பி.யில் ஹத்ராஸ் கிராமத்தில் தாழ்த்தப்பட்ட இளம்பெண் பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்யப்பட்ட சம்பவத்தை கண்டித்து கோவையில் காங்கிரஸ் கட்சியினர் தலையில் கதர் தொப்பி அணிந்தபடி காந்திய வழியில் அறவழி தர்ணா போராட்டம் நடத்தினர்.
உத்தரபிரதேச மாநிலம் ஹத்ராஸ் கிராமத்தில் இளம்பெண் ஒருவர் பாலியல் பலாத்காரம் செய்து கொல்லப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பெரும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. இந்நிலையில் பாதிக்கப்பட்ட இளம்பெண்ணின் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூற சென்ற, காங்கிரஸ் தலைவர்ராகுல் காந்தி மற்றும் திருமதி பிரியங்கா காந்தி ஆகியோரை காவல்துறையினர் தடுத்து நிறுத்தியதை கண்டித்து நாடு முழுவதும் காங்கிரஸ் கட்சியினர் பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.
இதன் ஒரு பகுதியாக கோவை மாநகர் மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பாக மாநில செயல் தலைவர் மயூரா ஜெயகுமார் தலைமையில் கோவை சிவானந்தா காலனி பகுதியில் மாபெரும் அறவழி தர்ணா போராட்டம் நடைபெற்றது.இதில் திரளாக கலந்து கொண்ட காங்கிரஸ் கட்சியினர் சமூக இடைவெளியை பின்பற்றி முக கவசங்கள் மற்றும் தலையில் கதர் தொப்பி அணிந்த படி காந்திய வழியில் அற வழி போராட்டம் நடத்தினர்.
இதில் செய்தியாளர்களிடம் பேசிய,
தமிழக காங்கிரஸ் கட்சியின் செயல் தலைவர் மயூரா ஜெயகுமார்,உ.பி.யில் இளம்பெண் பாலியல் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தில் தொடர்புடைய குற்றவாளிகளை தூக்கில் இட வேண்டும் எனவும்,இந்த சம்பவத்திற்கு பொறுப்பேற்று யோகி ஆதித்தயாத் தலைமையிலான அரசு ராஜினாமா செய்ய வேண்டும் என அவர் தெரிவித்தார்.இந்த போராட்டத்தில் முன்னால் சட்டமன்ற உறுப்பினர் எம்.என்.கந்தசாமி, மாநில செயற்குழு உறுப்பினர் பச்சைமுத்து,உட்பட பலர் கலந்து கொண்டனர்.