October 2, 2020
தண்டோரா குழு
டாக்டர். நா.மகாலிங்கம் நினைவு நாளும், தேசத்தந்தை மகாத்மா காந்தியின் பிறந்த நாளும் ஒருங்கிணைந்த தினமாக திகழ்வது சிறந்த ஒன்றாகும். அவ்வகையில் மகாத்மாவின் 151 ஆண்டு பிறந்த நாளும்,அருட்செல்வரின் ஆறாம் ஆண்டு நினைவு நாளும் சங்கமிக்கும் இந்த ஆண்டில் அக்டோபர் 2 முதல் ஒன்பதாம் தேதி வரை ஆனந்த ஜோதி வாரம் எனும் பொருண்மையில் ஆக்கப்பூர்வமான பல்வேறு நிகழ்வுகளை நிகழ்த்த திட்டமிடப்பட்டுள்ளது.
மெய்நிகர் பயன்முறை அடிப்படையிலான இந்த ஆனந்த ஜோதி வார நிகழ்வில் 1146 மாணவர்களுக்கு 1.146 கோடி ரூபாய் மதிப்பிலான மகாத்மா காந்தி உதவித்தொகை வழங்கப்பட்டது.இந்தநிகழ்விற்கு குமரகுரு கல்வி நிறுவனங்களின் இணைத் தாளாளர் சங்கர் வாணவராயர் தலைமையேற்று தலைமையுரை ஆற்றினார். முனைவர்.ஸ்டாலின் குணசேகரன் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு சிறப்புரை நல்கினார்.குமரகுரு தொழில்நுட்பக் கல்லூரி, குமரகுரு மேலண்மைக் கல்லூரி, குமரகுரு வேளாண்மைக் கல்லூரி, குமரகுரு பன்முகக் கலை அறிவியல் கல்லூரி ஆகியவற்றில் பயிலும் திறன் மிகுந்த மாணவர்கள் இத்திட்டத்தின் மூலம் பயன்பெறுவார்கள்.குமரகுரு கல்வி நிறுவனத் தலைவர் அருட்செல்வர் அய்யா இளம் திறமையாளர்களை அங்கீகரிப்பது மற்றும் ஊக்கப்படுத்துவதற்கு முன்னோடியாக திகழ்ந்ததற்கு 2007 ஆம் ஆண்டில் நம் தேச தந்தை மகாத்மா காந்தியாரின் பெயரில் அவர் துவங்கிய இந்த உதவித்தொகை சிறந்த சான்றாகும்.
இந்த திட்டத்தின் மூலம் இதுவரை 14 கோடிக்கு மேலதிகமான மதிப்புடைய உதவித்தொகை வழங்கப்பட்டிருப்பதும், 14,000 மேற்பட்ட மாணவர்கள் பயனடைந்திருப்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.ஆனந்த ஜோதி வார நிகழ்வு மேலும் ஒரு சிறப்பு வாய்ந்த அங்கமாக கல்வி, விளையாட்டு, கலை, சமூகம், சேவை மற்றும் ஆராய்ச்சி போன்ற செயல்பாடுகளில் ஆக்கத்தினை நிறுவியுள்ள மாணவர்களுக்கும் ஆளுமைகளுக்கும் மெய்நிகர் பயன் அடிப்படையில் சாதனையாளர் விருதுகளும் வரும் 9 அக்டோபர் 2020 அன்று வழங்கப்பட உள்ளன.
ஆனந்தஜோதி வாரத்தின் சிறந்த நிகழ்வாக நா மகாலிங்கம் தமிழ் ஆய்வு மையத்தின் தமிழ் உயர் ஆய்வு நிதிநல்கைத் திட்டம் அமைகின்றது.நா. மகாலிங்கம் பெயரால், அவரின் கனவுகளின் நீட்சியாய், குமரகுரு பன்முக கலை அறிவியல் கல்லூரியின் அங்கமாக நிறுவப்பட்டிருக்கும் நா. மகாலிங்கம் தமிழாய்வு மையம் உலகத்தரமான தமிழ் உயராய்வுகள், படைப்பாக்கம்,ஆராய்ச்சி, வெளியீடுகள்,அரிய புத்தகங்கள் அடங்கியுள்ள ஆய்வு நூலகம், ஓலைச்சுவடிகள் உள்ளிட்ட ஆவணங்கள் ஆகியவற்றை உள்ளடக்கியதாக திகழ்கின்றது.இம்மைத்தின்வழி தமிழ் அறிஞர்கள், ஆர்வலர்கள் மற்றும் ஆய்வாளர்கள் ஆகியோருக்கு ஆக்கம் மற்றும் ஊக்கம் ஊட்டும் வண்ணம் இந்த நிதி நல்கை திட்டம் திட்டமிடப்பட்டுள்ளது.
மாணவர்கள், தமிழறிஞர்கள், ஆய்வாளர்கள் மற்றும் ஆர்வலர்கள் ஆகியோர் தங்களுக்கு ஆர்வமுள்ள தமிழியல் துறைகளில் ஆராய்வதற்கும், அவர்களின் ஆய்வுத் தேவைகளை நிறைவேற்றுவதற்கும், தமிழியல் சார்ந்த ஆய்வு வெளியீடுகளை சமூகப் பயன்பாடு மற்றும் தமிழ் வளர்ச்சிக்காக வெளியிடுவதற்குமான இந்த நிதி நல்கை திட்டத்தின் ஆண்டு மதிப்பு ரூபாய் 10 லட்சம் ஆகும். ஆய்வுக் களம் மற்றும் தரத்தின் அடிப்படையில், விண்ணப்பித்தல் முறையிலும், தேர்வு குழுவின் பரிசீலனையில் அடிப்படையிலும் இந்த நிதி வழங்கப்படவுள்ளது. மாணவர்கள், ஆய்வாளர்கள் மற்றும் ஆர்வலர்கள் இம்மையத்தின் இணையத்தளத்தில் இது குறித்த கூடுதல் தகவல்களைப் பெற்றுக் கொள்ளலாம்.
தேசத்தந்தை மகாத்மா காந்தியடிகளுக்கும், தன் ஆக்கமிகு வாழ்நாளில் நிறைவு வரை காந்திய நெறியினை பின்பற்றிய அருட்செல்வர் டாக்டர். நா. மகாலிங்கம் அய்யாவிற்கும் சிறப்பு சேர்க்கும் விதமாக இந்த ஆனந்தஜோதி வாரத்தில் குமரகுரு கல்வி நிறுவனங்கள் மற்றும் ஆசிரியர் மாணவர் மன்றங்களின் சார்பில் பல்வேறு நிகழ்வுகளும் நிகழ்த்த திட்டமிடப்பட்டுள்ளதையும் மகிழ்வுடன் தெரிவித்துக்கொள்கிறோம்.