September 20, 2020
தண்டோரா குழு
கோவையில் நவராத்திரியை முன்னிட்டு பூம்புகார் விற்பனையகத்தில் இந்த ஆண்டிற்கான கொலு பொம்மைகள் கண்காட்சி பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்துள்ளன.
ஒவ்வொரு ஆண்டும் நவராத்திரி பண்டிகையை முன்னிட்டு கோவை டவுன்ஹால் பகுதியில் உள்ள பூம்புகார் விற்பனையகத்தில் கொலு பொம்மைகள் கண்காட்சி நடைபெறுவது வழக்கம்.அதன்படி இந்த ஆண்டிற்கான கொலு பொம்மைகள் கண்காட்சி வரும் அக்டோபர் 31 ம்தேதி வரை நடைபெற உள்ளது. இக்கண்காட்சியில் ராமர் கோவில் செட்,அத்திவரதர் மற்றும் ஆழ்வார் பொம்மைகள் பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்துள்ளன.
குறிப்பாக கண்காட்சியில் மகளிர் சுய தொழிலை ஊக்குவிக்கும் விதமான பொம்மைகள்,முதியோர் கல்வி மற்றும், மரபாச்சி பொம்மைகள், அத்திவரதர், அஷ்டலக்ஷ்மி, தசாவதாரம், ராமர்செட்,கல்யாணசெட்,பக்த பிரகலாத பட்டாபிஷேக செட்,கிருஷ்ணலிலை,கோபியர், கிரிகெட்,உரியடி,பொய்கால் குதிரை,கச்சேரி , சோட்டா பீம் கோவில் மற்றும் வீடு மாதிரிகள் , கொலு அலங்கார பொருட்கள், கொலு படிகள் , பரிசு பொருட்கள் மற்றும் கொலு அலங்கரிக்க தேவையான பொருட்கள் என ஏராளமான பொம்மைகள் காட்சிபடுத்தப்பட்டு விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளதாக பூம்புகார் விற்பனையகத்தின் மேலாளர் ரொனால்டு செல்விஸ்டின் தெரிவித்துள்ளார். கர்நாடகா , கொல்கத்தா ,ராஜஸ்தான் ,என இந்தியாவின் பல்வேறு பகுதிகளிலிருந்து வரவழைக்கப்பட்டுள்ள இந்த கொலு பொம்மைகள் பார்வையாளர்களிடையே பெரும் வரவேற்பை பெற்று வருகின்றன.
மேலும் இங்கு வரும் வாடிக்கையாளர்களுக்கு உடல் வெப்ப நிலை,இரத்த அழுத்தம் போன்ற மருத்துவ பரிசோதனைகளை ஹோமியோபதி மருத்துவர் ஹேமா சுரேஷ் தலைமையில் பரிசோதனை செய்து ஆர்சானிக் ஆல்பம் மாத்திரைகள் இலவசமாக வழங்க உள்ளது குறிப்பிடதக்கது.